×

திருவண்ணாமலையில் கடந்த 26ம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு பெற்றது: கோயிலில் பக்தர்கள் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபதிருவிழாவையொட்டி மலை மீது கடந்த 26ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீபம், இன்று இரவுடன் நிறைவு பெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், உலக பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த 26ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, மலைமீது ஏற்றப்படும் மகா தீபம், தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அதன்படி, தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதற்காக, அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் மலை உச்சிக்கு நெய் மற்றும் திரி ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 10வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. இந்நிலையில், மலை மீது காட்சிதரும் மகா தீபம் 11 நாட்களுக்குப் பிறகு இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.

அதைத்தொடர்ந்து, நாளை காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். தீப கொப்பரையில் இருந்து சேகரிக்கப்பட்ட தீப மை வரும் 27ம்தேதி நடைபெறும் ஆருத்ரா விழாவின்போது நடராஜருக்கு அணிவிக்கப்படும். இதையடுத்து நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். மற்ற பக்தர்களுக்கு தீப மை பிரசாதம் விற்பனை செய்யப்படும்.

இன்று மகா தீபம் நிறைவு நாள் என்பதால் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்திருந்தது. அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் நிறைவு நாளான இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோயிலில் காத்திருக்கின்றனர்.

The post திருவண்ணாமலையில் கடந்த 26ம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் நிறைவு பெற்றது: கோயிலில் பக்தர்கள் அலைமோதல் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...