×

2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது என் தந்தையை பிரதமராக்க சோனியா விரும்பவில்லை: முன்னாள் ஜனாதிபதியின் மகள் பேட்டி

புதுடெல்லி: எனது தந்தையை பிரதமராக்க சோனியா விரும்பவில்லை என்று பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவரது மகள் சர்மிஷ்தா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா தற்போது ‘இன் பிரணாப், மை ஃபாதர்: எ டாட்டர் ரிமெம்பர்ஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வரும் 11ம் தேதி வெளியிடுகிறார்.

இந்த புத்தகம் குறித்து அவர் பேட்டியில், ‘நான் எழுதியுள்ள இந்த புத்தகமானது, இந்திய அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான எனது தந்தையான பிரணாப் முகர்ஜியின் வாழ்க்கையை விவரிக்கிறது. கடந்த 2004ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, சோனியா காந்தி பிரதமராக தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அந்த பதவிக்கு இரண்டு மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றன.

அதாவது எனது தந்தை பிரணாப் முகர்ஜி மற்றும் மன்மோகன் சிங். நான் எனது தந்தையிடம், ‘உங்களை பிரதமராக்க போகிறார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘என்னை பிரதமராக்க சோனியா காந்தி அனுமதிக்க மாட்டார். இந்த விவகாரத்தில் நிச்சயமற்ற தன்மையை தொடராமல் விரைவில் பிரதமர் யார் என்பதை அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பிரதமர் ஆகாததால் ஏமாற்றம் அடையவில்லை. பிரதமராகும் நம்பிக்கையும் இல்லை. விரக்தி இல்லாததால் நம்பிக்கை இல்லை’ என்று என்னிடம் கூறினார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகும், எனது தந்தை பிரதமராவார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அது நடக்கவில்லை’ என்று கூறினர். ஷர்மிஷ்தா எழுதியுள்ள இந்த புத்தகம், இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

The post 2004 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது என் தந்தையை பிரதமராக்க சோனியா விரும்பவில்லை: முன்னாள் ஜனாதிபதியின் மகள் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sonia ,PM ,Congress ,2004 elections ,New Delhi ,Pranab Mukherjee ,Sarmishta ,Former President ,
× RELATED சொல்லிட்டாங்க…