×

அத்தியாவசியப் பொருட்களை பதுக்க வேண்டாம்: வடசென்னையில் மாலைக்குள் மின்விநியோகம்; 4 மாவட்டங்களில் 86 சதவீத போக்குவரத்து சீரடைந்தது: தலைமைச் செயலாளர் விளக்கம்

சென்னை: வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும் என தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பாக சென்னையில் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது; மிக்ஜாம் புயலால் தென் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென் சென்னை பகுதிகளில் இன்னும் சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அடையாறில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர் கடலுக்குள் வேகமாக செல்கிறது.

பள்ளிக்கரணை, வேளச்சேரி, பெரும்பாக்கம் வழியாக அடையாற்றில் இருந்து முட்டுக்காடு மூலம் கடலில் சென்று வெள்ள நீர் கலந்து வருகிறது. கடல் சீற்றம் காரணமாக அடையாறு ஆற்று நீரை உள்வாங்குவது குறைந்திருந்த நிலையில் தற்போது வேகமாக உள்வாங்குகிறது. அடையாற்றில் இருந்து கடலுக்கு செல்லும் முகத்துவாரத்தில் பொறியாளர்கள், எந்திரங்களுடன் கண்காணித்து வருகின்றனர். மடிப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது; விரைவில் வடியும்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாற்றில் உபரிநீர் திறப்பு 4,000 கனஅடியில் இருந்து 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து பணியாளர்கள் வந்து தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை, தீயணைப்புத்துறையினர் உள்பட துறைகளைச் சேர்ந்த 75,000 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 34 குழுக்கள் ஆங்காங்கே மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வடசென்னை, தென் சென்னையில் 25,000 உணவு பொட்டலங்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக வழங்கப்பட்டுள்ளன.

மிக்ஜாம் புயல், மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்தும் மின்சாரம் தாக்கியும் 9 பேர் உயிரிழந்தனர். 365 குடிசைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் இன்று 4 முறை உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 96 சதவீத இடங்களில் மின்விநியோகம் நடைபெற்று வருகிறது. தண்ணீர் வடியாத இடங்களில் மட்டுமே மின்சாரம் தடைபட்டுள்ளது, எஞ்சிய பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாக்கத்தில் இன்று மாலைக்குள் தண்ணீர் வடிந்துவிடும். சென்னையில் இன்று 14 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 19 லட்சம் லிட்டர் பால் விநியோகிக்கப்படும் நிலையில் இன்று 14 லட்சம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முழுமையாக பால் விநியோகம் சீரடைந்துவிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 வாட்டர் பாட்டில்கள், 34,000 ரொட்டி பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. மற்ற மாவட்டங்களில் இருந்து 50,000 குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டன.

சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் 20,000 குடிநீர் கேன்கள் விநியோகிக்கப்படும். 6,650 கிலோ பால் பவுடர் பிற மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. நாளை பெங்களூருவில் இருந்து 9,000 ரொட்டி பாக்கெட்டுகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். சென்னையில் 16 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது; 9 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது எஞ்சிய சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு விரைவில் போக்குவரத்து தொடங்கும். சென்னையில் 85 சதவீத இடங்களில் செல்போன் சேவை சீரானது.

சென்னையில் நாளை மாலைக்குள் செல்போன் சேவை முழுமையாக சீரடைந்துவிடும். புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 86 சதவீத போக்குவரத்து சீரானது. மக்கள் பீதியடைந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள வேண்டாம். குடிநீர் கேன்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வடசென்னையில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் வழங்கப்படும்.

The post அத்தியாவசியப் பொருட்களை பதுக்க வேண்டாம்: வடசென்னையில் மாலைக்குள் மின்விநியோகம்; 4 மாவட்டங்களில் 86 சதவீத போக்குவரத்து சீரடைந்தது: தலைமைச் செயலாளர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vatchenna ,Chief Secretary ,Chennai ,Shivdas Meena ,North Chennai ,Dinakaran ,
× RELATED ஜூன் 11-ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை