×

ஆவின் பால் விநியோகம் நன்கு சீரடைந்து வருகிறது: அமைச்சர் மனோதங்கராஜ்

சென்னை: ஆவின் பால் விநியோகம் நன்கு சீரடைந்து வருகிறது, பொதுமக்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாக பால் வாங்க வேண்டாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் எதிரொலியால், சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

குறிப்பாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். சில பகுதிகளில் மட்டுமே தனியார் பால் கிடைத்த நிலையில், அதுவும் அதிக விலைக்கு விற்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இன்றும் கூட சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பால் வாங்கவே நீண்ட வரிசையில் பொதுமக்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இன்று அதிகாலையே சென்னையில் உள்ள ஆவின் பால் விற்பனையகங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலைமை நன்கு சீரடைந்து வருகிறது, வாடிக்கையாளர்கள் பதற்றமடைந்து அன்றாட தேவையை விட அதிகமாகப் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்; அம்பத்தூர் பண்ணையில் வெள்ளம் வடிந்து சீரடையாத காரணத்தால், அங்கிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளில் சிறிது காலதாமதம் ஏற்படலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

The post ஆவின் பால் விநியோகம் நன்கு சீரடைந்து வருகிறது: அமைச்சர் மனோதங்கராஜ் appeared first on Dinakaran.

Tags : Avin ,Minister ,Manodankaraj ,Chennai ,Awin ,Dinakaran ,
× RELATED கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர்...