×

புயல் பாதிப்பு மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல்காந்தி வேண்டுகோள்


சென்னை: புயல் பாதிப்பு மீட்பு பணிகளில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் என்று ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை அருகே 30 மணி நேரம் நிலை கொண்டிருந்த நிலையில், வரலாறு காணாத அளவுக்கு மழையை கொட்டி தீர்த்துள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளன. இதில் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். புயல் வெள்ளத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், ‘‘மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட அழிவு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்தியால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும். அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புயல் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பகுதிகளில் காங்கிரசார் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

The post புயல் பாதிப்பு மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல்காந்தி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Rakulkhandi ,Chennai ,Rakul Gandhi ,Congress ,Rakulganti ,Dinakaran ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...