சென்னை : சென்னையே திணறி போகும் அளவுக்கு மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு விட்டது. வரலாறு காணாத மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாகிவிட்டது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை கொட்டி, தெருக்களில் சராசரியாக 3 அடி அளவுக்கு வெள்ளம் சூழ்ந்தது. சென்னை மக்களின் தவிப்பு, ஒரு புது அனுபவத்தையே தந்துள்ளது என்றே சொல்லலாம். 2015ம் ஆண்டு பெய்த பெருமழையின் போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திடீரென ஒரு லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் திறக்கப்பட்ட இந்த தண்ணீரால் சென்னை மட்டுமல்ல, புறநகர் பகுதிகளும் மிதந்தது. பலரது உயிர்களை பறித்தது. வீடுகள், உடமைகளை இழந்து தவித்த மக்களின் வேதனை சொல்லிமாளாது. அந்த பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் மீளவே 10 முதல் 15 நாட்கள் ஆனது.
ஆனால், இப்போது மிக்ஜாம் புயலின்போது, 2015ல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்த போது வெளியான தண்ணீரை விட இரு மடங்கு அதிகமாக மழையாக ெகாட்டியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அதிகபட்சமாக 45 செ.மீ., மழை பெய்தது குறிப்பாக ஒரு வாரத்தில் தொடர்ந்து அடை மழை பெய்தால் எவ்வளவு மழைநீர் வருமோ, அந்த அளவுக்கு இரண்டு நாட்களில் கொட்டி தீர்த்துள்ளது. இந்த அளவுக்கு மழைநீர் தெருக்களில் தேங்கியதற்கு யார் காரணம்? என்ற கேள்வி எழுகிறது. சென்னையே மிதக்கிறது… இதற்கு அரசும், அதிகாரிகளும் தான் காரணம் என்று வெறும் வாய் சவடால் விட்டு பொதுமக்கள் தாங்கள் செய்த தவறுகளிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர் என்றே சொல்லாம். ஏனென்றால் இந்த அளவுக்கு இயற்கை பேரிடர் ஏற்படும் போது எந்த அரசாலும் ஒருபோதும் அதை தடுக்க முடியாது. இதை தடுக்க பொதுமக்கள் ஒரு முன்முயற்சியும் எடுக்கவில்லை என்றே சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டு. ஏனென்றால் நிலத்தடி நீரை யாரும் முறையாக சேமிக்க முயற்சி செய்தது இல்லை. பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 100 முதல் 1000 வீடுகள் வரை கட்டுகின்றனர். ஆனால், பெயரளவுக்கு மழைநீர் சேகரிப்பு என சிறிதாக ஏற்படுத்தி கணக்கு காட்டுகின்றனர். இதனால் மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாமல் அப்படியே வீணாகிறது. 100 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பை எடுத்து கொண்டால், அதில் 100 வீட்டுக்கும் தனித்தனியாக ஒரு மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும். அதை சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளரே பராமரிக்கும் ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மழைநீரை நிலத்துக்குள் அனுப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை. அதேதான் தனி வீடு வைத்திருப்பவர்கள் நிலையும். தங்களது தேவைக்கு எந்த அளவுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறோமோ, அதில் 10ல் ஒரு பங்கை கூட நிலத்துக்குள் நாம் அனுப்ப முயற்சிப்பதில்லை. மழைநீரை சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சிறிதளவு கூட இல்லை என்பதே நிதர்சனம்.
அந்த காலத்தில் தனி வீடு வைத்திருப்பவர்கள் தங்கள் எதிர்கால சந்ததிகளை நினைத்து, வீடுகளில் ஒரு ஓரமாக கிணறு ஒன்றை தோண்டி வைத்திருப்பார்கள். மழை பெய்தால் அந்த நீர் அப்படியே கிணற்றுக்குள் செல்லும் வகையில் வசதி ஏற்படுத்தி இருப்பார்கள். அனைத்து வீடுகளிலும் இந்த முறை இருக்கும். அதனால் பெருமழை வந்தால் கூட அதை தாங்கும் சக்தி இருந்தது. தங்கள் வாரிசுகளுக்காக அந்த கால கட்டங்களிலேயே நீர் சேமிப்பு மேலாண்மையை உருவாக்கி இருக்கிறார்கள். ஆனால், இன்றோ நிலமை தலைகீழாக இருக்கிறது. அதைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் 45 ஆண்டுகளில் இப்படி ஒரு வெள்ளத்தை நான் பார்த்ததே இல்லை என்று மட்டும் கதை பேசுவார்கள்.
வாரிசுகளுக்கு எப்படி எல்லாம் பணம் சேர்க்கிறார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். ஆனால், அவர்களுக்காக மழைநீரை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் எழவில்லை. அதன் விளைவு எதிர்கால சந்ததிகள் பெரும் பாதிப்பை சந்திக்க போகிறார்கள். போட்டி போட்டு வீடு வாங்குகிறார்கள். அங்கு தங்களுக்கான கார் பார்க்கிங் வேண்டும் என்று கன்டிஷன் போடுகிறார்கள். ஆனால், மழைநீர் சேகரிப்பு இருக்கிறதா? என்று யாரும் கேட்பதில்லை. தேவையான தண்ணீரை மட்டும் போட்டி போட்டு உறிஞ்சுகின்றனர். ஒருவர் 100 அடி போர் போட்டு தண்ணீரை உறிஞ்சினால் பக்கத்து வீட்டுகாரர் 300 அடிக்கு போர் போடுகிறார். இதில் தான் அவர்கள் தங்கள் வேகத்தை காட்டுகின்றனர்.
அடுத்தபடியாக, பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவு நீர்நிலைகளில் இஷ்டத்துக்கு போடுகிறார்கள். அடைப்புகளை சரி செய்யும் போது தோண்டினால் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளாகத் தான் இருக்கிறது. கழிவுநீர் அமைப்புகளில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் தான் அடைத்துக் கொண்டிருக்கிறது. இதன் பாதிப்பு வருங்காலங்களில் கடுமையாக இருக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பிளாஸ்டிக் பொருட்களை எப்படி பயன்படுத்துவது, அதை எப்படி அப்புறப்படுத்துவது என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் துளியும் இல்லை. சென்னையில் உதாரணமாக தி.நகரை எடுத்துக் கொண்டால் 5 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களின் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் 200 பேர் தான் இருப்பார்கள். 5லட்சம் பேருக்கு 200 பேர் என்பது சமாளிக்க முடியாத ஒன்று.
எனவே தான் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில், தாங்களே துப்புரவு பணியாளராக மாறி செயல்பட வேண்டும். அப்படி செய்தால் பெருமளவு பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எந்த வகையில் பார்த்தாலும் ஒட்டுமொத்த பிரச்னைக்கு பொதுமக்கள் தான் காரணமாக இருக்கின்றனர். ஆனால், எந்த ஒரு இயற்கை பேரிடர் வந்தாலும் எளிதாக அரசையும், அதிகாரிகளையும் கை காட்டி விட்டு நாம் ஒதுங்கி கொள்கிறோம். சுயநலம் இருக்கலாம். அதிலும் பொதுநலம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளில் நாம் தப்பிக்க முடியும். சென்னையை பொறுத்தவரை வீடுகள் மற்றும் பொது இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டுமானங்கள் பலவும் பராமரிக்கப்படாமல், கழிவு நிரம்புவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதில் சிக்கல் நீடிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மழை நீர் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தினால், வறட்சி மற்றும் வெள்ளத்தை மாறி மாறி சந்திக்கும் அவசியம் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றன. வீணாக ஓடி மறையும் தண்ணீரைச் சேகரிப்பதற்கான மழைநீர் சேகரிப்பு திட்டம் உண்மையிலேயே பயன் தரக்கூடியது. இது ஒரு வகை என்றால், அந்த நீரை நிலத்தினுள் செலுத்துவது மற்றொரு வகை. மழை நீரை நிலத்தினுள் செலுத்துவதால் அந்த பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். இதற்கு அதிகளவில் பணம் செலவிடத் தேவையில்லை. நகர்ப்புற குடியிருப்புகளிலும், வணிக வளாகங்களிலும் இவற்றை நிர்மாணிக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்.
ஆனால் சென்னையில் யாரும் இதை முறையாக பின்பற்றுவதில்லை. இதை அனைத்து வீடுகளிலும் செய்திருந்தால் தேங்கி நிற்கும் மழைநீர் பூமிக்குள் சென்றிருக்கும். பாதிப்புகளை குறைத்திருக்கலாம். சந்ததிகளுக்கு 3 கார் பார்க்கிங் கிடைக்குமா என்று அலைபவர்கள் மழைநீர் சேகரிப்பு எங்களுக்கென்று தனியாக இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்டிருந்தால் இந்த பிரச்னைக்கு விடை கிடைத்திருக்கும்.
இதை சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் அனைத்தும் முயற்சிக்க வேண்டும். அப்படி முயற்சி செய்யாத பட்சத்தில் எந்த ஆட்சி வந்தாலும் சென்னையில் இதே நிலை தான் நீடிக்கும் என்பது வல்லுநர்களின் கருத்து. கால நிலை மாற்றத்தால் பெருமழை கொட்டுகிறது. அதற்கு ஏற்றவாறு மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் எச்சரிக்கை.
போலி விளம்பரம் ஜாக்கிரதை…
ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘‘நகர பகுதியில் வீடு கிடைக்கிறதே என்று பல லட்சங்களை கொட்டி ஏரிகளில் கட்டப்பட்ட வீடுகளை வாங்குகின்றனர். ‘5 அடியில் தண்ணீர் வரும்’ என்ற மாயை விளம்பரங்களை கண்டு ஏமாந்து, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று போட்டி போட்டு வாங்குகின்றனர். ஆனால், பெருமழை வந்தால் 5 அடியில் தண்ணீர் வரும் என்பது தலைகீழாக மாறி வீட்டுக்கு மேலே 10 அடிக்கு மேல் மழைநீர் செல்கிறது. கார் பார்க்கிங் முழுவதும் மூழ்கி முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது. இதுதான் போலியான விளம்பரங்களால் வீழ்ந்த சென்னை மக்களின் நிலமை. எனவே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 100 வீடுகள் இருந்தால் 100 வீடுகளுக்கும் மழைநீர் சேகரிப்பு இருக்க வேண்டும். அப்போது தான் மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்கள் ஓரளவாவது தப்பிக்க முடியும்’’ என்றார்.
The post அடுக்குமாடி குடியிருப்பு, மிக்ஜாம் புயல்,மழைநீர் சேகரிப்பு, ஏரிகளில் வீடு,ஆய்வாளர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.