×

குளச்சல் அருகே அரசு பஸ்சை முந்த முயன்றபோது தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி: பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டம்

குளச்சல்: கருங்கல் அருகே பாலவிளை இடையன்விளையை சேர்ந்தவர் நடராஜன் (63). கூலித்தொழிலாளி. அவரது மகன் அஜின் (28). இன்னும் திருமணமாகவில்லை. குளச்சலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை வசூலான பணத்தை நிறுவனத்தில் கட்டுவதற்காக பாலப்பள்ளம் பகுதியில் இருந்து குளச்சல் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சேவிளை நிறுத்தம் அருகில் செல்லும்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. இந்த நேரத்தில் எதிரே ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது பைக் தடுமாறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அஜின் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நடராஜன் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் குளச்சல் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

* குளச்சல் பணிமனையில் ஸ்டிரைக்

இந்தநிலையில் அரசு பஸ் டிரைவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கை வாபஸ் பெற கோரியும் குளச்சல் பணிமனை ஓட்டுனர்கள், கண்டக்டர்கள் பஸ்களை இயக்காமல் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டனர். காலை 4 மணிமுதல் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் இயக்கப்படவில்லை. பணிமனை முன் தொழிலாளர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
பஸ்கள் இயக்கப்படாததால் காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, போக்குவரத்துக்கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆனால் சுமூக முடிவு எதுவும் எட்டவில்லை. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சுமார் 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட டிரைவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாது, காவல் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யும் எனவும், பஸ்களை இயக்குங்கள் என்று பொதுமேலாளர் தொழிலாளர்களை கேட்டுக்கொண்டார். இதையடுத்து தொழிலாளர்கள் பஸ்களை இயக்க தொடங்கினர். போக்குவரத்து தொழிலாளர்களின் சுமார் 5 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

The post குளச்சல் அருகே அரசு பஸ்சை முந்த முயன்றபோது தனியார் நிதி நிறுவன ஊழியர் பலி: பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Nadarajan ,Balavila Intervalaya ,Karungal ,Ajin ,
× RELATED குளச்சல் அருகே நிலபுரோக்கர் வீட்டில் திருடிய வாலிபர் கைது 3 பேருக்கு வலை