×

சென்னையில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன்?: பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கம்

சென்னை: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நேற்று சென்னை, புறநகர் பகுதிகளில் ஏராளமான பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. சென்னையில் சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் இன்று பெட்ரோல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் சென்னையில் பெட்ரோல் பங்க்குகள் செயல்படாதது ஏன் என பல்வேறு தரப்பில் கேள்வி எழுந்த நிலையில் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.

மழை நீர் கலந்திருக்கக்கூடும் என்பதால் பெட்ரோல், டீசலை உரிய முறையில் பரிசோதித்த பிறகே வாடிக்கையாளர்களுக்கு விற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டீசலில் தண்ணீர் கலந்தால் எளிதில் பிரித்தெடுத்து உடனே விநியோகிக்க முடியும். எத்தனால் கலந்த பெட்ரோலில் கலந்துவிட்டால் நீரை பிரித்தெடுப்பது மிகவும் கடினம். தண்ணீர் கலந்த பெட்ரோலை விநியோகித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் உரிய ஆய்வு செய்து விநியோகம் செய்யப்படும். தண்ணீர் கலக்கப்படவில்லை என்று உறுதிசெய்த பிறகே பெட்ரோல் விநியோகிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் கையிருப்பிலோ அல்லது விற்பனை மையங்களுக்கு அவற்றை அனுப்புவதிலோ பாதிப்பு ஏதும் இல்லை. தண்ணீர் கலக்கவில்லை என்பதை உறுதிசெய்ய நேரமாவதால் விநியோகத்தில் சில பகுதிகளில் தாமதம் ஏற்படுவதாக பெட்ரோல் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

The post சென்னையில் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தாமதம் ஏன்?: பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Association of Petrol Vendors ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…