×

மிக்ஜாம் புயலால் 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; புதுவையில் பீச், பூங்காக்கள் மூடல்: வெறிச்சோடிய இசிஆர்

புதுச்சேரி: மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரியில் பீச், பூங்காக்கள் மூடப்பட்டன. துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து மிக்ஜாம் புயலாக வலுப்பெற்றது. புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிக கனமழை இருக்கும் என சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி பழைய துறைமுகத்தில் நேற்று 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. கடல்சீற்றம் அதிகமாக உள்ள நிலையில் 5ம்தேதி காலை வரையிலும் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்வதை தடை செய்வதற்காக 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பீச்சில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தாவரவியல் பூங்கா, பாரதி பூங்கா ஆகியவை மூடப்பட்டன.

புதுவையில் இருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படவில்லை. அத்தியாவசிய பயணம் செய்வோரின் ேதவைகளுக்காக மிக சொற்ப எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் பெரும்பாலான டெம்போக்கள், ஆட்ேடாக்கள் ஓடவில்லை. மிக்ஜாம் புயல் காரணமாக புதுச்சேரிக்கான டெல்லி, ஹவுரா ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்படவில்லை. புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தேர்வுகள் வேறுதேதிக்கு மாற்றியமைக்கப்பட்டன.

அதேவேளையில் பொதுவிடுமுறை இல்லாததால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதனிடையே புயல் இன்று முற்பகல் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தொடர்ந்து புதுவையில் நேற்று மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏக்களை முதல்வர் ரங்கசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மழையால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் வல்லவன், நிவாரண மற்றும் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post மிக்ஜாம் புயலால் 5ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; புதுவையில் பீச், பூங்காக்கள் மூடல்: வெறிச்சோடிய இசிஆர் appeared first on Dinakaran.

Tags : Mikjam storm ,Puduvai ,Puducherry ,Mijam ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...