×

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த 125 சவரனை சாக்கடை, குப்பையில் பதுக்கிய கில்லாடி மாமியார் கைது: குடும்பமே பக்காவா ஸ்கெட்ச் போடுதே கொள்ளையன் வெளி மாநிலத்தில் தஞ்சம்?

கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த 125 சவரன் நகையை சாக்கடை, குப்பையில் பதுக்கிய கொள்ளையனின் கில்லாடி மாமியாரை போலீசார் கைது செய்தனர் .
கோவை 100 அடி ரோடு பகுதியில் உள்ள ஒரு ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி நள்ளிரவு புகுந்த மர்ம நபர் 4.6 கிலோ நகைகளை கொள்ளையடித்து சென்றார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடைக்குள் மற்றும் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நகைக்கடையில் கொள்ளையடித்தது, தர்மபுரி அரூர் அருகேயுள்ள தேவரெட்டியூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட வினோத் (எ) விஜயகுமார் (எ) விஜய் (24) என்பதும், பொள்ளாச்சி வழியாக ஆனைமலைக்கு விஜய் தப்பி சென்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலையில் உள்ள வீட்டில் தனது மனைவி நர்மதா (22), 3 மாத ஆண் குழந்தையுடன் விஜய் இருந்தபோது போலீசார் சுற்றிவளைத்து கதவை தட்டினர். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி நர்மதா என்பவர் கதவை லேசாக திறந்தார். தனது குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும் சில நிமிடத்தில் ஆடை மாற்றி வந்து கதவை திறப்பதாகவும் கூறினார். போலீசார் 5 நிமிட நேரம் காத்திருந்தனர்.

பின்னர், நர்மதா கதவை திறந்தார். அப்போது வீட்டின் மேற்கூரை ஓடு திறந்து கிடந்தது. வீட்டின் ஓட்டை பிரித்து நர்மதா அவரது கணவன் விஜயை தப்ப வைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி ஜோஸ் ஆலுக்காசில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 3.2 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து தந்தவரே நர்மதா தான் என தெரியவந்தது. போலீசார் இவரை கைது செய்து விசாரித்தனர். இந்நிலையில் தர்மபுரி அரூர் பகுதியில் உள்ள விஜயின் மாமியார் யோக ராணி (46) என்பவர் வீட்டில் கோவை தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில், வீட்டின் அருகே இருந்த குப்பை தொட்டி, சாக்கடை கால்வாய், வீட்டின் முன் பகுதியில் குழி தோண்டி பிளாஸ்டிக் கவர் வைக்கப்பட்டிருந்த 125 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. செய்தனர். கொள்ளையடித்த பின் விஜய் மாமியார் வீட்டிற்கு சென்று தங்க நகைகள் சிலவற்றை அவரிடம் கொடுத்து சென்றதாக தெரிகிறது. போலீசார் தேடி வருவார்கள் என உணர்ந்து வீட்டிற்குள் நகைகள் வைக்காமல் நூதனமாக தங்க நகைகளை பதுக்கி வைத்துள்ளார் யோகராணி. இதனால் அவரையும் போலீசார் கைது செய்தனர். விஜய் இருப்பிடம் இன்னும் தெரியவில்லை. இந்த வழக்கில் தற்போது வரை 4 கிலோ அளவிற்கு தங்க நகைகள் மீட்கப்பட்டன. இன்னும் 600 கிராம் எடையிலான தங்க நகைகள் மீட்க வேண்டியுள்ளது. இந்த தங்க நகைகள் விஜய் தப்பி செல்லும் போது எடுத்து சென்று விட்டதாக தெரிகிறது. இவர் தங்க நகைகளுடன் வெளி மாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் கேரளா, கோவா உட்பட பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

The post கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த 125 சவரனை சாக்கடை, குப்பையில் பதுக்கிய கில்லாடி மாமியார் கைது: குடும்பமே பக்காவா ஸ்கெட்ச் போடுதே கொள்ளையன் வெளி மாநிலத்தில் தஞ்சம்? appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Jose Alukkas ,Jose Alukas ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்