சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் முத்துசாமி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், அமைச்சர் அர.சக்கரபாணி தாம்பரம் மாநகராட்சிக்கும், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவடி மாநகராட்சிக்கும், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், அமைச்சர் எ.வ.வேலு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கும், அமைச்சர் சி.வெ.கணேசன் சோழிங்கநல்லூர், பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகளுக்கும், அமைச்சர் பி.மூர்த்தி திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் நேரடியாக சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன். நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை 8.30 மணி முதல் நேற்று (4ம் தேதி) காலை 8.30 வரை சென்னையில் 15 இடங்களில் 20 செ.மீ.க்கு மேலாக குறிப்பாக பெருங்குடி போன்ற இடங்களில் 29.16 செ.மீ. என்ற அதி கன மழை பெய்துள்ளது. ஆவடியில் அதிகபட்சமாக 27.6 செ.மீட்டரும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 22.04 செ.மீ. என பல பகுதிகளில் கடுமையான மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்று காலை 8.30 முதல் மதியம் 2.30 வரை 6 மணி நேரத்திற்குள் சராசரியாக 12 செ.மீ. அளவிற்கு அதி கனமழை பெய்துள்ளது. இந்த பெருமழை இரவு வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரலாறு காணாத இந்த புயல் மற்றும் பெருமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொதுமக்களின் துயரை குறைக்கும் வகையில் தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
* 5,35,00 உணவு பொட்டலம்
சென்னையில் மட்டும் 15 இடங்களில் நிவாரண முகாம்கள் துவக்கப்பட்டு, அங்கு தங்கியுள்ளவர்களுக்கு இதுவரை 5022 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 250 தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
The post ‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக மேலும் 7 அமைச்சர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.