×

மிரட்டும் ‘மிக்ஜாம்’ புயல்; 20 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழை: தனி தீவானது தலைநகர் சென்னை

* வெள்ளக்காடானது சாலைகள்
* போக்குவரத்து துண்டிப்பால் நகரமே ஸ்தம்பிப்பு
* ரயில், பஸ் சேவைகள் ரத்து
* கடைகள் மூடலால் மக்கள் தவிப்பு
* தத்தளிக்கும் திருவள்ளூர், ஆவடி
* நாளை காலை வரை 50 செ.மீ மழை பெய்யும்
* பொதுமக்களுக்கு எச்சரிக்கை: போர்க்கால அடிப்படையில் மீட்பு பணி

சென்னை: மிக்ஜாம் புயல் நெருங்கி வருவதால் 20 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழையால் தலைநகர் சென்னை தீவாக மாறி உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு நகரமே ஸ்தம்பித்து உள்ளது. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். புயல் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலை கொண்டு உள்ளதால் திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகள் தத்தளித்து வருகிறது. நாளை காலை வரை 50 செ.மீ மழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.வங்க கடல் பகுதியில் கடந்த 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர், அது அதிதீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் அதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.

தொடர்ந்து வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று மியான்மர் பெயரிட்டுள்ளது. இது, அந்த நாட்டில் உள்ள ஒரு நதியின் பெயர் ஆகும். வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோர பகுதிகளில் நிலவும். இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை முற்பகல் ஆந்திராவின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கு இடையே இது கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும் இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை கொட்ட தொடங்கியது.

பிற்பகல் பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடமால் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றிரவு முதல் ஒரு நிமிடம் கூட விடாமல் பலத்த காற்றுடன் மழை கொட்டி வருகிறது. இதனால், சாலைகளில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி உள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, வள்ளுவர் கோட்டம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர், கே.கே.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பாரிமுனை, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆவடி, சோழவரம், செம்பரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், கொட்டூர், பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் பல கி.மீ. தூரத்துக்கு மழைநீர் தேங்கி சாலை இருக்கும் இடமாக தெரியாமல் தீவு போல் காட்சியளிக்கிறது.

சாலைகளில் தேங்கி உள்ள மழைநீரை அகற்றும் பணியில் மழையையும் பொருட்டுப்படுத்தாமல் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, பொதுமக்களுக்கு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளது. அதன்படி, மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக முக்கியமான சேவைகள், வசதிகள் எல்லாம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதீத கனமழை காரணமாக மிக்ஜாம் புயல் சென்னையை அப்படியே முடக்கி போட்டுள்ளது.
சென்னையில் சாலையில் ராட்சத மரங்கள் விழுந்து உள்ளதாலும், மழைநீர் தேங்கி உள்ளதாலும், பலத்த காற்றும் வீசி வருவதாலும் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மழை குறைய குறைய மின் விநியோகம் வழங்கப்படும் என்று மின்வாரிய தெரிவித்து உள்ளது. முக்கிய சாலைகள் அனைத்தும் மூழ்கிய நிலையில், சென்னையில் 14 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக இதுவரை 15 இடங்களில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்துள்ளன. அதை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணி வரை சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. அதன் பின்னர் பொதுமக்கள் நலன் கருதி ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. சென்னையில் ஒரு சில இடங்களில் பேருந்துகள் இயங்கினாலும் 8 மணி வரை தற்காலிகமாக பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு கருதி பேருந்து சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. புயலின் வேகம் குறைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ரயில் நிலையத்தை சுற்றி 4 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தின் முன்புறம் உள்ள சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அரும்பாக்கம் ஸ்டேஷன் அருகே சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தை அணுகுவதில் சிறிது சிரமம் ஏற்படும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அருகில் உள்ள நிவாரண மையங்களுக்கு செல்லும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.சென்னையில் இடைவிடாமல் கொட்டும் கனமழையால், அசோக் நகர் வடபழனி வெள்ள நீரில் மிதக்கிறது.

வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் கார்களில் வந்தவர்கள் ஆங்காங்கே மாட்டி தவித்து வருகின்றனர். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வரை உள்ள சாலையில் சராசரியாக 2 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு கிடக்கிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் பலர் அவற்றை வேதனையுடன் பார்வையிட்டனர். அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவசரத் தேவைக்கு கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் வெள்ள நீரில் சிக்கி தவித்து வருகின்றன. சென்னையில் பல இடங்களில் பெட்ரோல் பங்க், கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் செய்வதறியாமல் தவித்தனர். சரி, ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் என்றால் உணவு டெலிவரி சேவையும் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

மிக்ஜாம் புயல் தற்போது மிக தீவிர புயலாக மாறி உள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை சென்னைக்கு கிழக்கே 90 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் மிக்ஜாம் புயல் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடுக்கு நகர்ந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டு இருந்தது. அது அப்படியே நகர்ந்து மதியம் 2.30 மணிக்கு ஆந்திரா மாநில நெல்லூர் கடற்கரையோரம் 50 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொள்ளும். இதனால், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை கொட்டி வருகிறது. இந்த மழை புதுச்சேரி முதல் திருவள்ளூர் பகுதிகளுக்கு வரை நாளை காலை 8.30 மணி வரை தொடரும். நேற்று இரவு முதல் 80 முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. சீராக 65 கி.மீ வேகம் வரை காற்று வீசும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மணி நேரம் வரையும், பழவேற்காட்டில் மதியம் 3 மணி வரை காற்றும் வீசும் கனமழை சீராக 6 மணி நேரம் வரை கொட்டும். சென்னையில் இரவு 8 மணி வரை இடவிடாமல் கனமழை பெய்யும்.

இரவு பிறகே மழை குறையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 மணிக்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது 20 மணி நேரத்துக்கும் மேல் கொட்டும் மழையால் அதிகபட்சமாக ஆவடியில் 27 செ.மீக்கு மழை பெய்து உள்ளது. சென்னையை பொறுத்தவரை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பெய்து உள்ளது. இதே அளவுக்கு இன்று முழுவதும் மழை பெய்யும். நாளை காலை வரை மழை தொடரும் என்பதால் மேலும் 25 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால், யாரும் வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது. தமிழக அரசும் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தி உள்ளது. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க வெளியே சுற்றும் வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். தீவான சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

47 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் பெருமழை
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை கடந்த 2015ம் ஆண்டு கொட்டிய மழையை மிஞ்சிவிட்டது. 2015ம் ஆண்டு 33 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் தற்போது 34 செ.மீ அளவுக்கு மழை பதிவாகி உள்ளது. 1976ம் ஆண்டு சென்னையில் 45 செ.மீ மழை பதிவாகி இருந்தது. தற்போது 47 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது..

மேலும் 2 காற்றழுத்தம் தமிழகம் முழுவதும் மழை கொட்டும்
மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், லட்சத்தீவு அருகே வரும் 7ம் தேதி அல்லது 8ம் தேதி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது. மேலும் 8ம் தேதி அந்தமானுக்கு தெற்கு பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாக உள்ளது. இது, வலுபெற்று தமிழக கடலோர பகுதிகளுக்கு நெருங்கி வந்து 12ம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் மழை கொட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

5 துறைமுகங்களில் 5ம் எண் புயல் கூண்டு
மிக்ஜாம் புயல் நெருங்கி கொண்டு வருவதால் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி மற்றும் புதுச்சேரியில் 5ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மழையிலும் விடாமல் தொடரும் பணி
சென்னை முழுவதும் கிட்டதட்ட பெரும்பாலான பகுதிகளில் 20 செ.மீ அளவுக்கு மழை பெய்து உள்ளதால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பலத்த காற்று வீசு வருவதால் ஆங்காங்கே மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து உள்ளது. இதை கொட்டும் மழையிலும், இடுப்பு வரை தேங்கி இருக்கும் தண்ணீரிலும் இறங்கி அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடைவிடாமல் பெய்யும் மழையால் அகற்றும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர். இதனால் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு துரிதமாக செயல்பட்டு கொட்டும் மழையிலும் பணிகளை செய்து வருகின்றனர். இதை பார்க்கும் மக்கள் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். பணியில் உள்ள மாநகராட்சி ஊழியர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அத்தியாவசிய தேவைக்காக 320 பேருந்துகள் மட்டுமே இயக்கம்
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலால் சென்னையே மிதக்கிறது. சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2600 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று ஓரளவு வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளில் மட்டும் வெறும் 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. அதிலும் சில பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கி திக்குமுக்காடியது.

அவசர உதவிக்கு 1913 எண்ணை அழைக்கலாம்
வெள்ள நீரில் சிக்கிக் கொண்டால், 1913 எண்ணுக்கு அழைக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்காக, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள் உள்ளிட்டவைகளுடன் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் அளிக்கும் புகார்களை தொடர்ந்து அந்தந்த பகுதிகளில் இவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உணவு தயாரித்து வழங்கும் மாநகராட்சி
சென்னை மாநகராட்சி சார்பில் மிக்ஜாம் புயலில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 162 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட 521 இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், உணவு கிடைக்காத 1,39,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம், அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து உணவு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

The post மிரட்டும் ‘மிக்ஜாம்’ புயல்; 20 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி தீர்க்கும் கனமழை: தனி தீவானது தலைநகர் சென்னை appeared first on Dinakaran.

Tags : Capital Chennai ,Vilakadana Roads ,Mikjam ,Separate Island ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...