×

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன: ஆளுநர் ரவி

சென்னை: மிக்ஜாம் புயல் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் “மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்துள்ளது.

மிக்ஜாம் புயல் நாளை (05-12-2023) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; “மிக்ஜாம் புயலால் நமது கிழக்கு கடலோர மாவட்டங்களில் சில மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலைமையை மத்திய அரசும் மாநில அரசும் உயர்மட்ட அளவில் கண்காணித்து வருகின்றன. மாநில அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்றி, நிலைமை சீராகும் வரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

The post மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பணியிலும் மத்திய, மாநில அரசுத்துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன: ஆளுநர் ரவி appeared first on Dinakaran.

Tags : central ,state government departments ,Governor Ravi ,Chennai ,Mikjam ,Central and ,
× RELATED மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை...