×

வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி: ஏரியிலிருந்து நீர் திறக்க கலெக்டர் உத்தரவு


கூடுவாஞ்சேரி: வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. பொதுமக்கள் விட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் நேற்று மாலை முதல் சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் வண்டலூர் ஊராட்சியில் உள்ள சிங்கார தோட்டம், மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், சுவாமி விவேகானந்தர் நகர், நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள சதானந்தபுரம், ஆலப்பாக்கம், எஸ்எஸ்எம். நகர், கொளப்பாக்கம் அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஜெகதீஷ் நகர், ஐயஞ்சேரி, நர்மதா நகர், கோதாவரி நகர், செல்லியம்மன் நகர், காரணைப்புதுச்சேரி ஊராட்சியில் உள்ள அண்ணா நகர், பெரியார் நகர், காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், உதயசூரியன் நகர், மீனாட்சி நகர் இதேபோல் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு மழை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும் மக்கள் குடியிருக்கும் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. விடிய விடிய பெய்த கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதில் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்துள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பால், பிஸ்கட் உட்பட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் மற்றும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட நந்திவரம் பெரிய ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. இதனை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று இரவு அப்பகுதிக்கு சென்று ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீரை கலங்கல் மற்றும் மதகுகள் வழியாக வெளியேற்றும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி தலைமையில் மீட்பு குழுவினர் வீடுகளில் தத்தளிக்கும் மக்களை பத்திரமாக மீட்டு தனியார் திருமண மண்டபங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் முதலை வாக்கிங்..
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம், ஆலப்பாக்கம் வழியாக நெடுங்குன்றம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று இரவு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று சாலையை கடந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியபடி உள்ள நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் ஏற்கனவே அடிக்கடி முதலைகளை பிடிப்பதும், அதை மீட்டு பூங்காவில் ஒப்படைப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், பெரிய முதலை ஒன்று சாலையை கடந்த தகவல் நெடுங்குன்றம் ஊராட்சி முழுவதும் தீ போல் பரவி உள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post வண்டலூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் பொதுமக்கள் அவதி: ஏரியிலிருந்து நீர் திறக்க கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vandalur, Kuduvancheri ,Vandalur ,Guduvancheri ,Vita ,Kuduvancheri ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்