×

மக்களவை தேர்தல் வியூகங்களை வகுக்க டிச.6ல் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கார்கே அழைப்பு

புதுடெல்லி,: இந்தியா கூட்டணியின் 4வது கூட்டம் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தும் ஒரே நோக்கத்துடன் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட 15 எதிர்க்கட்சியினர் ஒன்றிணைந்து உருவாக்கிய புதிய கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜுன் 15ம் தேதி பாட்னாவில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து 15 கட்சிகளின் கூட்டணி 26 கட்சியாக வலுப்பெற்றது. இந்த 26 கட்சிகள் கலந்து கொண்ட 2வது கூட்டம் பெங்களூருவில் கடந்த ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அப்போது இந்த கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரும் சூட்டப்பட்டது. இக்கூட்டணியின் 3வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற்றது.

இதனிடையே தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த கூட்டம் நடைபெறவில்லை. இதுகுறித்து காங்கிரஸ் 5 மாநில தேர்தல்களில்தான் கவனம் செலுத்துவதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் அண்மையில் அதிருப்தி தெரிவித்திருந்தார். தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வௌியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தெலங்கானாவில் காங்கிரசும், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜவும் ஆட்சியை கைப்பற்றி உள்ளன.

இந்நிலையில் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள்(டிச.6) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் புதன்கிழமை மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ‘இந்தியா’ அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டுமென கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் 5 மாநில தேர்தல் முடிவுகள், மக்களவை தேர்தலில் பாஜவை தோற்கடிக்க வியூகங்கள் வகுப்பது, தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

The post மக்களவை தேர்தல் வியூகங்களை வகுக்க டிச.6ல் ‘இந்தியா’ கூட்டணியின் 4வது கூட்டம்: கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கார்கே அழைப்பு appeared first on Dinakaran.

Tags : India' Alliance ,Garke ,NEW DELHI ,India Alliance ,Delhi ,BJP ,2024 Lok Sabha Election ,Dinakaran ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...