×
Saravana Stores

கோஷ்டி மோதலால் கோட்டை விட்ட கெலாட்

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜ வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதலே கெலாட் கோட்டை விட காரணம் என கூறப்படுகிறது. ராஜஸ்தானில் பாஜ ஆட்சியை கைப்பற்றியதை தொடரந்து முதல்வர் பதவியை கெலாட் நேற்று மாலை ராஜினாமா செய்தார்.

1970ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த கெலாட் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் ராஜஸ்தான் பிரிவு தலைவராக 1979 வரை பதவி வகித்தார். கிழக்கு வங்காளத்தில் அகதிகளுடன் இணைந்து பணியாற்றியதால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மிகவும் பாராட்டு பெற்ற கெலாட், ராஜீவ் காந்தியாலும் பாராட்டுகளை பெற்றவர். ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 3 முறை பொறுப்பு வகித்த கெலாட், 1998, 2008 மற்றும் 2018 பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்று 3 முறை முதல்வராக பதவி வகித்து வந்தார்.
நடந்து முடிந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஏழைகளுக்கு மானிய எரிவாயு சிலிண்டர், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வருவோம் என கெலாட் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உள்கட்சி பூசல்களே கெலாட்டின் தோல்விக்கும் வித்திட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட்டுக்கும், கெலாட்டுக்கும் இடையேயான பனிப்போர் முடிவுக்கு வந்தாலும் அதுவே தற்போது காங்கிரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. கெலாட் மீண்டும் முதல்வராக வேண்டும் என்ற கெலாட் கட்டிய மனக்கோட்டையை காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி மோதல் தகர்த்து விட்டது.

‘யாரும் எதிர்பாராத ஒன்று’
ராஜஸ்தான் தேர்தல் முடிவு யாரும் எதிர்பாராத ஒன்று என்று முதல்வர் அசோக்கெலாட் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்,’ ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பாதகமான தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்வோம். புதிய முகங்களைக் கொண்டு தேர்தலை சந்தித்தால் வெற்றிபெற்று இருக்கலாம் என்று கூறுவது தவறு. அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் இவை அனைத்தும் பாதிப்புதான்.

இந்த தேர்தலில், கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என அனைவரும் பெருமளவில் பிரச்சாரம் செய்தனர். எங்கள் திட்டங்கள் முன்னுதாரணமாக இருந்தன. எங்கள் திட்டங்கள், வாக்குறுதிகளின் அடிப்படையில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், வெற்றி பெற முடியவில்லை. எந்த பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். எனது இறுதி மூச்சு வரை மாநில மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன்’ என்றார்.

The post கோஷ்டி மோதலால் கோட்டை விட்ட கெலாட் appeared first on Dinakaran.

Tags : Kelat ,Koshti conflict ,JAIPUR ,ASHOK KELAD ,BAJA ,RAJASTHAN ,Congress Party ,Khoshti Confrontation ,Kelad ,Koshdi ,Dinakaran ,
× RELATED ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும்...