×

சுரங்கத்துறை மின் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

சென்னை: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: கிராபைட் உள்ளிட்ட பல்வேறு வகையான கனிமங்களை எடுக்க மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் அறிவிப்பு ஒன்றிய சுரங்க அமைச்சகத்தின் இணையதளத்தில் கடந்த நவம்பர் 29ம் தேதி வெளியிடப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. கிராபைட் எனும் கனிமத்தை எடுக்க மின் ஏலம் கோரும் டெண்டர் அறிவிப்பில் தென்காசி மாவட்டம், குருவிக்குளம் ஒன்றியம் திருவேங்கடம் வட்டத்தில் உள்ள குறிஞ்சாங்குளம் கிராமம் குறிப்பிடப்பட்டு உள்ளது. குறிஞ்சாங்குளம் கிராமப் பகுதிகளில் சுமார் 656.46 ஏக்கர் நிலப்பரப்பில் கிராபைட் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு, மின் ஏலம் விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளக்கால் பகுதி, நொச்சிப்பட்டி, வேலம்பட்டி வடக்கு, இலுப்பக்குடி, மண்ணடிப்பட்டி, மாருதிப்பட்டி ஆகிய கிராம பகுதிகளில் வெவ்வேறு வகையான கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளுக்கும் மின் ஏலம் விடப்பட்டுள்ளது.

கிராபைட் கனிமத்தை எடுக்க முதலில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சுரங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். இதன்மூலம், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். குறிஞ்சாங்குளம் உள்ளிட்ட கனிம வளங்கள் கண்டறியப்பட்டு உள்ள கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இதன்மூலம் பாதிப்படையும். கிராஃபைட் கனிமம் எடுப்பதால் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழுவதுடன் மனிதர்களின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட நோய்த்தொற்றுகள் உருவாகும் அபாயம் உள்ளது. மனிதர்களையும், சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு கொண்டுவரும் இவ்வகையான திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு மக்களின் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். தமிழக அரசையோ கலந்து ஆலோசிக்காமல் ஒன்றிய அரசின் சுரங்கத்துறை தன்னிச்சையாக முடிவெடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. கிராஃபைட் உள்ளிட்ட கனிம வளங்களை எடுக்க தமிழகத்தில் மின் ஏலம் கோரும் இணையவழி டெண்டர் முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தொடக்கத்திலேயே இம்முயற்சியை ஒன்றிய அரசு கைவிடா விட்டால், மதிமுக சார்பில் மக்களை திரட்டி போராடும் சூழல் உருவாகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுரங்கத்துறை மின் ஏலத்திற்கு தடை விதிக்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Mines Department ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி பேட்டி