×

அழகிய பூங்காக்களாக மாறும் பயன்படுத்தப்படாத நிலங்கள் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள்: இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு திட்டம்

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களின் தேவைகளுக்காக அந்நிய தாவரங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு வனப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டன. இந்த தாவரங்கள் உள்ளூர் தாவரங்களின் வளர்ச்சிக்கும், பல்லுயிர் பாதுகாப்பிற்கும் இடையூறாக இருக்கின்றன. அத்தகைய அந்நிய தாவரங்களை அகற்றும் பணி வனத்துறையால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அந்நிய தாவரங்களில் விரைவில் பரவும் தன்மை கொண்ட நான்கு தாவரங்களான சீமைக்கருவேலம், உண்ணிச்செடி, சீமைக் கொன்னை மற்றும் சீகை மரம் ஆகியவற்றை வனங்களில் இருந்து முற்றிலும் அகற்றுவதற்கும் அப்பகுதிகளில் உள்ளூர் வனவளத்தை மீட்பதற்கும் இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு புதிய கொள்கை வகுத்துள்ளது.

கிராம அளவில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில், வனம் சார்ந்த பலன்கள் கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் சிறுவனமே மரகத பூஞ்சோலை எனப்படும். இந்த திட்டத்தின் கீழ் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்படும். இந்த திட்டமானது ரூ.25 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும். இதற்காக ஒரு கிராமத்திற்கு ரூ.25லட்சம் வீதம் ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் இதுவரை 2 கட்டமாக ரூ.13.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் வளம் பெருக, பெருக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். இருப்பினும், சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்க மரம், செடி, கொடிகளை வளர்க்கும் சோலை காடுகளை ஏற்படுத்த வேண்டியதும் காலத்தின் அவசியமாக மாறிப்போயிருக்கிறது. இதை நோக்கமாக கொண்டே தமிழ்நாடு அரசு அமெரிக்கா நிதியுதவி திட்டத்தின் கீழ் மாநிலத்தில் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 100 கிராமங்களில் மரகத பூங்சோலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி ஒவ்வொரு வனச்சரகத்துக்கு உட்பட்டு ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஒரு ெஹக்டர் அதாவது 2.47 ஏக்கர் நிலத்தில் பூஞ்சோலை உருவாக்கப்படும். அங்கு கனி வகைகள் கொண்ட மரங்கள், நிழல் தரும் மரங்கள், மலர் தரும் செடிகள் ஆகியவற்றை நட்டு வளர்த்து, வனத்துறை சார்பில் பூங்கா அமைக்கப்படும். அந்த பூஞ்சோலைக்குள் நடைபயிற்சி மேற்கொள்ள பிரத்யேக தளம், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பின் அதை பராமரிக்கும் பொறுப்பு அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வனத்துறை பராமரிக்கும்

ஒரு வனகோட்டத்துக்கு 4 முதல் 6 வரை மரகத பூஞ்சோலை அமைய உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இடத்தை தவிர்த்து வருவாய்த்துறைக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சொந்தமான இடத்தை தேர்வு செய்து அதில் பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த பூங்கா பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூங்கா அமைத்து முதல் 2 ஆண்டுகள் வனத்துறை பராமரிக்கும். அதன்பிறகு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் பூங்காவை பராமரிக்க ஒப்படைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அழகிய பூங்காக்களாக மாறும் பயன்படுத்தப்படாத நிலங்கள் 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள்: இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு அரசு திட்டம் appeared first on Dinakaran.

Tags : NADU ,INDIA ,Tamil Nadu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...