×

தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள: 12 முக்கிய நடவடிக்கைகள்

சென்னை: மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு தரப்பில் 12 முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு:

* பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 இதர நிவாரண முகாம்களும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

* கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் தரப்பட்டு வருகிறது.

* பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

* பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

* புயலின் காரணமாக 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* மீனவர்களுக்கு உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை வழங்கியதன் காரணமாக, கிழக்கு கரையில் இருந்த 930 படகுகள் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளன. மேலும், 57 படகுகள் கிருஷ்ணாம்பட்டினம், ஜூவாலதின் மற்றும் ராமய்யா பட்டினம் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 403 படகுகள் மேற்கு கரையில் பாதுகாப்பாக உள்ளன.

* தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

* மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

* புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், டிவிட்டர், முகநூல் (பேஸ்புக்) உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. ஒரு முகாமில் 348 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 714 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

The post தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள: 12 முக்கிய நடவடிக்கைகள் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Tamilnadu Government ,
× RELATED செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான்...