×

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் 3 மாநிலங்களில் பாஜ ஆட்சி: தெலங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி

புதுடெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக ராஜஸ்தான், தெலங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் 7ம் தேதி தொடங்கி நவம்பர் 30ம் தேதி வரை நடந்தது. இதில், மிசோரம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்றைக்கு (டிச.4) ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மற்ற 4 மாநிலங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை ஒட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும், ராஜஸ்தானில் பாஜ ஆட்சி அமையும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே இந்த கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகின. ராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் பாஜ வேட்பாளர்கள் அதிக அளவில் முன்னிலை பெற்றனர். ராஜஸ்தானில் ஆளும் கட்சியான காங்கிரசின் முக்கிய வேட்பாளர் சச்சின் பைலட் உள்ளிட்ட தலைவர்கள் கூட ஆரம்பத்தில் பின்தங்கியது அக்கட்சிக்கு அதிர்ச்சிகரமாக அமைந்தது. இங்கு 199 தொகுதிகளில் கடந்த 2018ல் 100 இடங்களில் வென்ற காங்கிரஸ் இம்முறை 69 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. கடந்த 30 ஆண்டாக ராஜஸ்தானில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது இந்த தேர்தலிலும் மாறவில்லை. பாஜவை பொறுத்த வரை கடந்த 2018ல் 73 இடங்களில் வென்றிருந்த நிலையில், தற்போது 115 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 100 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதே போல மத்தியபிரதேசத்தில் ஆளும் பாஜ கட்சிக்கு காங்கிரஸ் கடுமையான போட்டி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக பாஜ அமோக வெற்றியை வசப்படுத்தியது. 230 தொகுதிகளில் பாஜ கடந்த 2018ல் 109 இடங்களில் வென்றிருந்த நிலையில் தற்போது 164 இடங்களைப் கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் கட்சி கடந்த 2018ல் 114 இடங்களை கைப்பற்றிய நிலையில் இம்முறை 65 இடங்களில் மட்டுமே வென்றது.

சட்டீஸ்கரில் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் வெற்றி பெறும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்த நிலையில், பெரும் திருப்பம் ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் காலையில் காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் பாஜ முன்னிலை பெற்றது. 90 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜ 54 இடங்களை கைப்பற்றியது. கடந்த 2018ல் சட்டீஸ்கரில் பாஜ வெறும் 15 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது. காங்கிரஸ் 35 இடங்களை கைப்பற்றி தோல்வியை சந்தித்தது. கடந்த 2018ல் காங்கிரஸ் 68 இடங்களில் வென்றிருந்தது. தெலங்கானாவை பொறுத்த வரையில், ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இங்கு 119 தொகுதிகளில் வெற்றிக்கு 60 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 64 இடங்களுடன் ஆட்சியை கைப்பற்றியது. பிஆர்எஸ் 39 இடங்களில் மட்டுமே வென்று தோல்வி அடைந்தது. பாஜ வெறும் 8 தொகுதிகளை கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. தெலங்கானா மாநிலம் உருவாகி 9 ஆண்டாக பிஆர்எஸ் கட்சியே ஆட்சி செய்தது. தற்போது முதல்வர் சந்திரசேகரராவின் ஆட்சிக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன் மூலம், மக்கள் தீர்ப்பை ஏற்பதாக கூறிய சந்திரசேகரராவ் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

கடந்த மே மாதம் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ், தற்போது தெலங்கானாவில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தென் இந்தியாவில் 2வது மாநிலத்தை காங்கிரஸ் வசப்படுத்தி உள்ளது. மூன்று மாநில வெற்றியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பாஜ தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்ட கட்சியின் ரேவந்த் ரெட்டி வீட்டின் முன்பாகவும், கட்சி அலுவலகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த தேர்தல் முடிவு மூலம் நாடு முழுவதும் பாஜ ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 ஆக சரிந்துள்ளது.

The post மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் 3 மாநிலங்களில் பாஜ ஆட்சி: தெலங்கானாவில் காங்கிரஸ் அமோக வெற்றி appeared first on Dinakaran.

Tags : MADHYA PRADESH ,RAJASTHAN ,CHHATTISGARH ,AMOKA ,TELANGANA ,New Delhi ,Congress ,
× RELATED இந்திரா காந்தியின் சொத்துக்களை...