×

நெருங்கி வருகிறது ‘மிக்ஜாம்’ புயல் சென்னை, 3 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே நாளை கரை கடக்கிறது

* 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலையில் வலுப்பெற்று புயலாக (மிக்ஜாம்) மாறியது. இன்று அந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே நாளை (5ம் தேதி) தீவிரப் புயலாக கரையைக் கடக்கும். புயல் கரை கடக்கும் போது 110 கிமீ வேகத்தில் காற்று வீசும். புயல் சென்னை அருகே நெருங்கும் போது வட தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்பதால் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களுக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை தொடர்ச்சியான மழையைக் கொடுத்துவந்த நிலையில், கடந்த 2 மாதங்களில் புயல் ஏதும் இன்றியே கடந்து சென்றுவிட்டன. இந்நிலையில், தான் நவம்பர் இறுதியில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் மெல்ல மெல்ல வலுப்பெற்று நேற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 2ம் தேதி நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து 3ம் தேதி காலையில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்து ெகாண்டே இருந்தது. குறிப்பாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்தது. மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மிக கனமழையும் பெய்தது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்தது. சென்னையில் 32 இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. நேற்று மாலையில் சென்னைக்கு 150 கிமீ தொலைவில் மையம் ெகாண்டிருந்தது மிக்ஜாம் புயல், வட மேற்கு திசையில் நகரத்தொடங்கியது. புயல் ஆந்திரா நோக்கி செல்லும் பாதையில் சென்னைக்கு அருகில் வர வாய்ப்புள்ளது. சென்னைக்கு 100 கிமீ அருகில் வரும் போது மழை அதிகரிக்கும். அதாவது புயலின் மையப்பகுதி சென்னைக்கு 100 கிமீ அருகில் இருக்கும் போது புயலின் விளிம்பு வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும் என்பதால் அந்த பகுதிகளில் மிக அதிக அளவில் கனமழை பெய்யும். அதனால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை என்பது சில இடங்களில் 15 செமீ முதல் 25 செமீ வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதாவது வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப் படி 3ம் தேதி மாலை முதல் தொடர் மழை இருக்கும் என்றும், அதிகாலையில் 20 செமீ வரை மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதனால் 4ம் தேதி(இன்று) காலையிலும் மிககனமழை பெய்யும். இந்நிலையில், 4ம் தேதி இன்று மிக்ஜாம் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 5ம் தேதி முற்பகலில் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே தீவிரப் புயலாக மாறி கரையைக் கடக்கும். அந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு 100கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் வீசும். இந்த நிகழ்வின் காரணமாக 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யும். மேலும் வேலூர், ராணிப் பேட்டை, திருண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும். கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை கொட்டும் என்ற நிலையில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. சில இடங்களில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிக்ஜாம் புயல் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும் போது, குடிசை வீடுகள், சாதாரண கூரை வேய்ந்த வீடுகள், சேதமடையும் வாய்ப்புள்ளது. நீண்ட நாளைய கட்டிடங்கள் இடியும் வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான மரங்கள் வேருடன் சாயும் வாய்ப்பும், பெரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழும் வாய்ப்பும் உள்ளது. மின் கம்பங்கள், தொலைதொடர்ப்பு வழித்தடங்கள் லேசான பாதிப்புகள் ஏற்படலாம். மண் சாலைகளில் அரிப்பு, தார் சாலைகளில் லேசான பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நெல் மற்றும் தோட்டப் பயிர்கள் பாதிக்கப்படும். பள்ளமான பகுதிகளில் கடல் தண்ணீர் புகும். அதிக அளவில் மழை பெய்யும் நேரத்தில் சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கண்ணை மறைக்கும் நிலை ஏற்படும் என்பதால் வாகனங்கள் கவனமாக செல்ல வேண்டும். மலைப் பகுதிகளில் சில இடங்களில் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மழை நீர் படிப்பு பகுதிகளில் இருந்து வரும் அதிக மழை நீரின் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் நுழையவும் வாய்ப்புள்ளது.

மேற்கண்ட வாய்ப்புகள் உள்ளதை அடுத்து, மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம், மீன் பிடிக்க கடலுக்குள் சென்றவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும். கப்பல் போக்கு வரத்து மற்றும் வான் வழி போக்கு வரத்துகள் ஒழுங்குபடுத்த வேண்டும், கடலோரப் பகுதிகளில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிப்போர் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம். இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களில் உள்ளவர்கள் அங்கு தங்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டிருப்பதை அடுத்து, தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. புயல் காரணமாக கடலில் சீற்றம் அதிகமாக இருக்கும். குறிப்பாக 9 மீட்டர் முதல் 14 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும் வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை விட்டுள்ளது. மேலும், ாணிப்பேட்டை விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

* இன்று பொதுவிடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேக காற்றுடன் அதிகனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதையொட்டி இன்று பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த 4 மாவட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேவேளையில் இம்மாவட்டங்களில் அடிப்படை தேவைகளான காவல்துறை, தீயணைப்பு துறை, பால் விற்பனை, மருத்துவமனை/ மருந்தகம், மின்சாரம், போக்குவரத்து, குடிநீர் விநியோகம், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை

புயல் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

* புயலின் பாதை

தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 2ம் தேதி நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை புயலாக வலுப்பெற்றுள்ளது. இன்று மிக்ஜாம் புயல் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொள்ளும். 5ம் தேதி முற்பகலில் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே தீவிரப் புயலாக மாறி கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நெருங்கி வருகிறது ‘மிக்ஜாம்’ புயல் சென்னை, 3 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்: நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே நாளை கரை கடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai, District 3 ,Nellore Masulipatnam ,Chennai ,southwestern Bank Sea ,3 ,Nellore ,Masulipatnam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...