×

லோன் வாங்கி தருவதாக பெண்ணை அழைத்து வந்து 9 பவுன் நகை அபேஸ் செய்த வாலிபர்

சேலம்: சேலம் அருகே வீட்டு லோன் வாங்கித்தருவதாக அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்து வந்து நூதன முறையில் 9 பவுன் நகையை அபேஸ் செய்து சென்ற வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள அனுப்பூர் அரசநத்தத்தை சேர்ந்தவர் செல்வம் (55), விவசாயி. இவரது மனைவி சின்னபொண்ணு (49). இவர்களது வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஒரு வாலிபர் சென்றுள்ளார். அவர், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மூலம் வீட்டு லோன் வாங்கித்தருவதாக கூறியுள்ளார். இதற்காக தன்னுடன் சேலத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அப்போது, கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் பார்க்கும்போது கழுத்தில் நகை அதிகளவு போட்டிருந்தால் தான், லோன் தருவார்கள் எனவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்று மாலை செல்வம், சின்னபொண்ணு ஆகியோர் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்துள்ளனர். அங்கு வந்த வாலிபர், அவர்கள் இருவரையும் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் அழைத்துச் சென்று, மருத்துவச்சான்று வாங்க வேண்டியுள்ளது எனக்கூறியுள்ளார். இதற்காக செல்வத்தை ஓரிடத்தில் நிற்க வைத்துவிட்டு, சின்னபொண்ணுவை மட்டும் அழைத்துக் கொண்டு எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றி ஒரு பையில் போட்டுக்கொடுத்தால், உங்கள் கணவரிடம் கொடுத்துவிடுவேன், நீங்கள் எக்ஸ்ரே எடுத்து விட்டு வரலாம் எனக்கூறியுள்ளார்.

அதனால், சின்னபொண்ணு தனது கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை கழற்றி அந்த வாலிபரிடம் ஒரு பையில் போட்டு கொடுத்துள்ளார். பிறகு நான் உங்கள் கணவரிடம் செல்கிறேன், நீங்கள் எக்ஸ்ரே எடுத்துவிட்டு அங்கு வாருங்கள் எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். கணவர் இருந்த இடத்திற்கு சென்றதும், அந்த பையை மட்டும் அவரிடம் கொடுத்துவிட்டு, உள்ளே இருந்த 9 பவுன் நகையை அபேஸ் செய்துகொண்டு அவ்வாலிபர் தப்பினார்.

சிறிது நேரத்தில் சின்னபொண்ணு திரும்பி வந்தபோது தான், தங்களை ஏமாற்றி 9 பவுன் நகையை அந்த வாலிபர் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே அரசு மருத்துவமனை புறக்காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், வீட்டு லோன் கிடைக்க வேண்டும் என்பதற்காக பக்கத்து வீட்டு பெண்ணிடம் இருந்து நகையை வாங்கி போட்டு வந்தேன். அந்த 9 பவுன் நகை திருடு போய் விட்டது எனக்கூறியுள்ளார். தொடர்ந்து சந்தேக வாலிபர் மற்றும் சின்னபொண்ணு சென்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சந்தேக நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதனைக் கொண்டு நகை திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post லோன் வாங்கி தருவதாக பெண்ணை அழைத்து வந்து 9 பவுன் நகை அபேஸ் செய்த வாலிபர் appeared first on Dinakaran.

Tags :
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவுடி கைது