×

அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு; பருவ மழை பாதிப்பு எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது

திருவாரூர், டிச.3: திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்து வருவதாக அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டத்திற்கு பின் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தலைமையிலும், மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் நிர்மல்ராஜ், கலெக்டர் சாரு, எஸ்.பி ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் பிரியங்கா, எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேசியதாவது,
மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கக் கூடிய அளவில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு, அதன் வழியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. துணை ஆட்சியர் நிலையிலான அனைத்து வட்டாரங்களுக்கும் ஒரு குழு அளவில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக அளவிலும், கோட்ட அளவிலும் 13 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக் கூடிய பகுதிகளாக 176 பகுதிகளில் 41 பகுதிகள் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதிகளும், 68 பகுதிகள் மிதமான பகுதிகளும், 67 பகுதிகள் குறைவாக பாதிக்கக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு அதில் 200 நிவாரண முகாம்கள் அமைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாய உணவு மையங்கள் அமைத்திட 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் நடப்பாண்டில் தீயணைப்பு துறையினரால் 152 மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகளும் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் 2 நாள் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு ஒரு மாதத்திற்கு அனுப்புவதற்காக 9,499 மெ.டன் அரிசி, 1,254 மெ.டன் சர்க்கரை, 542 மெ.டன் கோதுமையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் 1 லட்சத்து 30 ஆயிரம் மணல் மூட்டைகளும், 84 ஆயிரத்து 500 சாக்குகளும் மற்றும் 5 ஆயிரம் சவுக்கு மரங்களும் தயார் நிலையில் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு ஏதுவாக 239 பணிகள் எடுக்கப்பட்டு 1,100 கி.மீ தூரத்திற்கு தூர்வாரப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்தார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், வேளாண்மை இணை இயக்குனர் ஏழுமலை, துணை இயக்குனர் லெட்சுமிகாந்தன், ஆர்.டி.ஓக்கள் சங்கீதா, கீர்த்தனாமணி, நகராட்சி தலைவர்கள் புவனப்பிரியா செந்தில் (திருவாரூர்), சோழராஜன் (மன்னார்குடி), மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கலைவாணி மோகன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post அனைத்து தடுப்பணை கதவுகளும் திறப்பு; பருவ மழை பாதிப்பு எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Dinakaran ,
× RELATED தடையின்றி நேரடி நெல் கொள்முதல் 31...