×

புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு

புதுக்கோட்டை, டிச.3: புதுக்கோட்டை மாவட்டத்தில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க இயற்கை ஆர்வலர்களை இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த அமைப்பினர் மரங்களை வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானித்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயல் பல லட்சக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. இதனால் மரங்கள் நிறைந்த புதுக்கோட்டை மாவட்டம் மரங்கள் அற்ற பகுதியாக வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையை கண்டு அன்று முதல் இப்போது வரை விழுந்த மரங்களுக்கு இணையாக இரண்டு மடங்கு மரங்களை நட வேண்டும் என்ற எண்ணத்தோடு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதேபோல் மரம் ஆர்வலர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் தொடர்ந்து மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் மரங்களை வெட்டுவது சட்டப்படி குற்றம். மரங்களை வெட்டக்கூடாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களில் உள்ள மர கிளைகளை மட்டும் வெட்டி விடாமல் முழுமையாக மரத்தை வெட்டுவதும், அதேபோல் அவர் அவர்கள் தேவைக்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருவதை இயற்கை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து கண்டித்து வருகின்றனர்.
மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மரங்கள் வெட்டப்பட்டு வரக்கூடிய நிலையில் மாவட்ட நிர்வாகமோ இதனை கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்றும் அதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கும் நோக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்களை இணைத்து புதுக்கோட்டை மர நண்பர்கள் அமைப்பினர் ஏற்பாட்டில் புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்கள் அமைப்புகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பசுமை புதுகை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் இதில் மரங்கள் வெட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது, மரங்கள் வெட்டப்படாமல் இருக்க மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று முறையிடுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post புதுக்கோட்டையில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க புதிய அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta ,Pudukkottai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...