×

திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள்: 22ம் தேதி வழங்கப்படுகிறது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க வருகிற 22ம்தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருமலையில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியொட்டி வரும் 23ம்தேதி முதல் ஜனவரி 1ம்தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படும்.

குளிர் மற்றும் மழை காரணமாக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தடுப்பதற்காக திருப்பதியில் 10 இடங்களில் 94 கவுன்டர்களில் வருகிற 22ம்தேதி முதல் நேர ஒதுக்கீடு இலவச டோக்கன்கள் வழங்கப்படும். மொத்தம் 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. இதில் திருப்பதியில் உள்ள இந்திரா மைதானம், ராமச்சந்திரா புஷ்கரணி, சீனிவாசம் காம்ப்ளக்ஸ், விஷ்ணு நிவாசம் காம்ப்ளக்ஸ், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி இரண்டவது சத்திரம், பைராகிப்பட்டேடாவில் உள்ள ராமாநாயுடு மேல்நிலைப்பள்ளி, எம்.ஆர்.பள்ளியில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி, ஜீவகோனாவில் உள்ள ஜில்லா பரிஷத் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும், திருமலையில் உள்ள உள்ளூர் மக்களுக்காக கவுஸ்துபம் ஓய்வறையில் வழங்கப்படும்.

எனவே இந்த 10 நாட்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அல்லது 22ம்தேதி முதல் வழங்கப்படும் நேர ஒதுக்கீடு இலவச சர்வ தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 22, 24, 31 மற்றும் ஜனவரி 1ம் தேதிகளில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 25 முதல் 30ம் தேதி வரை பக்தர்கள் இல்லாமல் இந்த சேவைகள் நடத்தப்படும்.

23 முதல் ஜனவரி 1ம்தேதி வரை சகஸ்ர தீப அலங்கார சேவை பக்தர்கள் இல்லாமல் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் தங்க ரதத்தில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலிக்க உள்ளார். வைகுண்ட துவாதசியை முன்னிட்டு அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். டிச.17 முதல் ஜனவரி 14ம்தேதி வரை மார்கழி மாதம் என்பதால் காலையில் சுப்ரபாத சேவைக்குப் பதிலாக திருப்பாவை பாராயணம் நடைபெறும். 28ம்தேதி திருமலையில் பிரணாயகலக உற்சவம் நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன்கள்: 22ம் தேதி வழங்கப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Tirupathi Eumamalaiaan Temple ,Vaikunda Ekadasiaioti Paradise Gate ,Tirupathi Elumalaiaan Temple ,Thirupathi Eumalayan Temple ,Paradise Gate ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5.04 கோடி உண்டியல் காணிக்கை