×

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கிவைத்தார்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழாவையொட்டி இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று நேற்று மங்கள இசையுடன் இருமுடி விழா துவங்கியது. இன்று அதிகாலை 5 மணிக்கு கருவறை முன்பாக இயற்கை வழிபாடு நடைபெற்றது. இருமுடி அபிஷேகத்தை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதலில் 9 சிறுமியர்களும் 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். இதையடுத்து சக்தி மாலை அணிந்து 3 அல்லது 5 தினங்கள் விரதமிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் குடும்பமாக இருமுடி சுமந்துகொண்டு சித்தர் பீடம் வந்து சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் வர உள்ளனர்.  விழாவையொட்டி தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று துவங்கிய இருமுடி விழா அடுத்தாண்டு ஜனவரி மாதம் 24ம்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. ஜனவரி 25ம்தேதி ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தைப்பூச ஜோதி ஏற்றப்பட உள்ளது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நேற்று இருமுடி செலுத்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆன்மீக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீ தேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீ லேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் மேற்பார்வையில் ஆன்மிக இயக்கத்தினர் செய்திருந்தனர்.

The post ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கிவைத்தார் appeared first on Dinakaran.

Tags : Irumudi ,Lakshmi Bangaru Adikalar ,Adiparashakti ,Siddhar Peedam ,Melmaruvathur ,Irumudi festival ,Adiparashakti Siddhar Peedam ,Taipusa Jyoti festival ,Lakshmi Bangaru Adikar ,
× RELATED ஆதிபராசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில்...