×

இடியின் குரல் (The Voice of Thunder)

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஒருவன் கடவுள், அரசன், ஞானி, குரு இவர்களைச் சந்திக்கச் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது. அவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பிருகதாரண்யக உபநிடதம் சொல்லும் கருத்தை இங்குச் சுட்டலாம். பிரஜாபதி தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவருக்கும் ‘த’ என்பதை உபதேசிக்கும் பொழுது, தேவர்கள் தமம் (தன்னடக்கம்) பழக வேண்டும் என்றும், மனிதர்கள் தத்த (தானம்) செய்ய வேண்டும் என்றும், அசுரர்கள் தயை (இரக்கம்) கொள்ள வேண்டும் என்றும் உபதேசித்தார்.

எனவே, மனிதர்கள் தானம் செய்ய வேண்டும் என்பது உபநிடதத்தால் பரிந்துரைக்கப்படுகிறது என்று ஹேமத்பந்த் ஸ்ரீசாயி சத்சரித்ரத்தில் குறிப்பிட்டு, பாபா தட்சிணை பெற்றுக் கொள்வதன் காரணத்தை விளக்குகிறார்.பிருகதாரண்யகம் உபநிடதங்களிடையே மிகவும் உயர்ந்தது. அளவிலும் பெரியது. (ப்ருஹத்). காட்டில் உபதேசிக்கப்பட்டது (ஆரண்யகம்). உயர்வான சிந்தனைத் தொகுப்பான உபநிடத ஞானத்தின் அசாதரணமான ஒளிச்சுடர்.

ஆறு அத்தியாயங்களில் மொத்தம் நாற்பத்தேழு பிராமணங்களாக்கி வகை பிரித்து ஞானத்தை உபதேசிக்கிறது. ‘‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ (நான் பிரம்மாய் இருக்கிறேன்) என்னும் புகழ் பெற்ற மஹாவாக்யத்தை அருளியது. ‘அஸதோ மா ஸத்கமய, தமஸோ மா ஜ்யோதிர்கமய, ம்ருத்யோர்மா அம்ருதம் கமய (1:3:28)- உண்மையற்றதிலிருந்து என்னை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக. இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக, மரணத்திலிருந்து என்னை மரணமிலாப் பெருநிலைக்கு அழைத்துச் செல்வாயாக’ என்னும் உலகப் புகழ் பெற்ற பிரார்த்தனையை கொடையாகத் தந்தது.

விதேக மன்னரான ஜனகர் யாஜ்ஞவல்கியரிடம்.
‘‘மனிதனுக்கு ஒளிதருவது எது’’ என்று கேட்டார். அதற்கு
‘‘சூரியன்’’ என்று முனிவர் பதிலளித்தார்.

‘‘சூரியன் மறைந்த பிறகு’’
‘‘சந்திரன்’’
‘‘சூரியனும் சந்திரனும் மறைந்த பிறகு’’
‘‘அக்னி’’
‘‘அக்னியும் அணைந்து விட்டால்’’
‘‘ஒலி’’
‘‘ஒலியும் அடங்கி விட்டால்’’
‘‘ஆன்மா. ஆன்ம ஒளியாலேயே மனிதன் செயல்படுகின்றான்’’

இந்தத் தத்துவ உரையாடலை, உலக இலக்கியத்தில் வியப்புக்குரியதாகச் செய்தது இந்த உபநிடதம் தான். இச்சிந்தனையை ‘who is there to take up my duties?’ asked the setting sun. ‘I Shall do what I can my master’, said the earthen lamp என்று தாகூர் தன்னுடைய “STRAY BIRDS’’ல் பயன்படுத்துகிறார். பிருகதாரண்யகத்தை ‘எளிதில் புரிந்து கொள்ள முடியாததும் மிகவும் ஆழமும் ஆன உபநிடதம்’ என்று கருத்துரைப்பார் மகான் அரவிந்தர். ஹேமத்பந்த் ஸ்ரீசாயி சத்சரித்ரத்தில் எடுத்துக் காட்டிய உபதேசம் இந்த உபநிடதத்திலே சிறப்பு வாய்ந்தது.

தேவர்கள், மனிதர்கள், அசுரர்கள் ஆகிய மூவருக்கும் இந்த உபதேசத்தை (தாம்யத-தத்த-தயத்வம்) தெய்வக்குரல் இடியின் குரலாக மீண்டும் மீண்டும் ஆமோதித்தது. இது மூவருக்குமான உபதேசம் அல்ல. மனிதர்களிடத்திலே தேவர்களும். அசுரர்களும் இருக்கின்றனர். எனவே, இந்த மூன்று பண்புகளையும் (தன்னடக்கம்-தானம்-தாயை) மனிதன் ஒருவனே கடைப்பிடிக்க வேண்டும் என்பார் ஆதிசங்கரர். இம்மூன்று பண்புகளையும் மூன்று அவதாரங்கள் நிகழ்த்திய அற்புதங்களில் இருந்து நாம் புரிந்து கொண்டு அதனை கடைப்பிடிக்க வேண்டும்.

கும்பகோணத்தைச் சேர்ந்த சில வேத பண்டிதர்கள் மகாராஷ்டிரத்திற்குச் சென்று வேத பாராயணம் செய்து தங்களை மிகவும் திறமைசாலிகளாக காண்பித்து அதன்மூலம் பெரும் பொருள் பெற்று வந்தனர். சீரடியைச் சேர்ந்த சாயிநாதர் வேத பண்டிதர்களின் மீது ஆர்வம் கொண்டவர் என்றும், அவர்களுக்கு நிறைய பொருள் கொடுத்து உதவுவார் என்றும் கேள்விப்பட்டு சீரடிக்குச் சென்றனர்.

ஆனால் ஃபக்கீரின் உருவில் இருந்த பகவான் பாபாவின் முன் வேதம் சொல்ல முதலில் தயங்கினர். பின் பொருளாசையினால் சற்று தூரத்தில் நின்று தங்கள் இருதயத்தில் இருக்கும் இறைவனுக்கு வணக்கம் செய்வதாகவும், பாபாவை வணங்கவில்லை என்ற எண்ணத்தோடும் வணங்கினர். மிகுந்த அகங்காரத்தோடு வேத கோஷம் தொடங்கியது. சற்று நேரத்தில் அடுத்து வரும் மந்திரம் அவர்களுக்கு மறந்து போயிற்று. பகவான் அவர்களைப் பார்த்து புன்னகைத்து விட்டு அடுத்த மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டு தங்கள் முன்னால் இருப்பது ‘சர்வக்ஞரான பரமேஸ்வரனே’ என்று உணர்ந்து, அகங்காரத்தை விட்டொழித்து பகவானின் திருவடிகளை வணங்கி, மன்னிப்பு வேண்டி நின்றனர். பகவான் கருணை கூர்ந்து அவர்களிடம் ‘வேதம் பரமாத்ம ஸ்வரூபம்’. எனவே, பொருளாசையற்று தன்னடக்கத்தோடு (தமம்) வேத பாராயணம் செய்து பிரம்மத்தை உணர்வீர்களாக’’ என்று ஆசீர்வதித்து, அவர்கள் விரும்பிய வண்ணமே நிறைய பொருள் கொடுத்து அனுப்பினார்.

அமரபுரம் என்னும் கிராமத்தில் ஓர் ஏழை வீட்டின் முன் நின்று பகவான் ஸ்ரீநரசிம்ஹ சரஸ்வதி ‘பவதி பிக்ஷாம் தேஹி’ என்று பிக்ஷை கேட்டார். அவ்வீட்டில் உள்ள தம்பதியினர் மிகவும் வறுமை நிலையில். வீட்டில் வளர்ந்திருந்த ஒரு கொடியின் இலைகளை வேகவைத்து தங்கள் பசியை போக்கி வந்தனர். அந்நிலையில் சுவாமி பிக்ஷைக்கு வந்ததால் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தனர். இருப்பினும் சுவாமியை தங்கள் வீட்டிற்குள் அழைத்து, தாங்கள் உண்பதற்காக வைத்திருந்த, சமைத்த இலைகளைப் பரிமாறினர். இதனால் சுவாமி மிகுந்த திருப்தியடைந்தார். தாங்கள் பசியோடு இருந்தாலும் வீடு தேடி வந்த சுவாமிக்கு பிக்ஷை கொடுத்தது பற்றி மகிழ்ந்தனர்.

சுவாமி அவர்களை ஆசீர்வதித்து, கிளம்பும் போது அவர்கள் பசியாறுவதற்கு வைத்திருந்த கொடியை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டுச் சென்றார். இதைக் கண்டு மனைவி துடிதுடித்து சுவாமிக்கு அபசாரம் செய்து விட்டதால் சுவாமி கோபமடைந்து இப்படிச் செய்து விட்டார்களோ என்று கலங்கினாள். அதற்கு கணவன் அவளிடம், நன்மையோ தீமையோ அனைத்தும் நம் கர்ம வினையின்படிதான் நடக்கும். அதனால் வருந்தாதே. தத்தாத்ரேயரின் அவதாரமான சுவாமியின் செயல் ஏதோவொரு நன்மையைக் குறித்தே நடக்கும் என்றான். அக்கொடியை எடுத்து மீண்டும் அந்த இடத்தில் நடுவதற்குப் போனான். அப்போது அக்குழியில் ஏதோ ஒன்று தென்பட்டது.

தோண்டி எடுத்த போது அது தங்கப் புதையல் என்று தெரிந்தது. அதை எடுத்துக் கொண்டு சுவாமியிடம் சென்றனர். இதை ரகசியமாக வைத்துக் கொண்டு குழந்தைகளோடு நல்ல வாழ்க்கை வாழ்ந்து முடிவில் மோட்சம் அடைவீர்களாக என்று சுவாமி ஆசீர்வதித்தருளினார். இதன் மூலம் தானத்தின் (தத்த) பெருமையையும், மஹா அவதாரத்திற்கு முழு மனதோடு அளித்த தானம் எங்ஙனம் இவ்வுலக சுகத்தையும், முத்தியின்பத்தையும் ஒரு சேர கொடுத்தது என்பதையும் அறியலாம்.

ஒரு சமயம் பகவான் சத்ய சாயி பாபா பெங்களூரிலிருந்து புட்டபர்த்திக்கு கார்முலம் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அவரது மாணவர்களில் ஒருவர் தான் காரினை ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பொழுது, ஒரு நீண்ட நாகப் பாம்பு வழியை கடந்து கொண்டு இருந்தது. டிரைவரான அம்மாணவர் அதனை கவனித்து விட்டார். அப்பாம்பைக் காப்பாற்றக் காரினை நிறுத்துவதா அல்லது அதன் மேலேற்றிச் செல்வதா என்று தீர்மானிக்க இயலவில்லை. காரின் பின்சீட் பக்கம் திரும்பிப் பார்த்தார். பகவான் ஆழ்ந்த தியானத்திலிருந்தார். எனவே, காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார்.

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையம் வந்து சேர்ந்ததும் மாணவர் பகவான் அங்கியின் முதுகு புறத்தில் மண்ணாலான ஒரு பட்டை நீளமாக விழுந்திருப்பதைக் கண்டார். ‘சுவாமி உங்கள் ஆடை பின்புறம் அழுக்காகி இருக்கிறது’ என்றார். அதற்கு பகவான், ‘சிறிது நேரத்திற்கு முன் பாவம் அந்த நாகப்பாம்பைக் காப்பற்றுவதற்கு, கார் டயருக்கு கீழே செல்ல வேண்டியிருந்தது’ என்று சொன்னார். எல்லா உயிர்களுக்கும் பகவான் காரணமின்றி கருணை செய்வதை ‘‘அவ்யாஜ கருணை’’ (தயா) என்று சாத்திரங்கள் கூறும்.

மனிதன் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய, தன்னடக்கம் (Self-restraint), தானம் (Charity), தயை (Compassion) என்னும் மூன்று பண்புகளையும் பிரஜாபதி கூறியவுடன், தெய்வக்குரலே இடியின் குரலாக ‘தம் தம் தம்’ என்று மூன்று முறை சொல்லியது.

இதனை, நோபல் பரிசு பெற்ற ‘The Waste Land’ என்னும் கவிதையில், ‘‘The Voice of Thunder” (இடியின் குரல்) என்று மொத்தம் முப்பத்திரண்டு வரிகளில் (400-432) அப்படியே எடுத்தாள்கிறார் டி.எஸ்.எலியட் (T.S. Eliot). இதுவே, பாரதம் தந்த ஆன்மிக கருவூலங்களான உபநிடதங்களின் ஞானச்சுடர். ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

முனைவர் அ.வே. சாந்திகுமார சுவாமிகள்

The post இடியின் குரல் (The Voice of Thunder) appeared first on Dinakaran.

Tags : Kunkum Anmigam ,God ,Gani ,Dinakaran ,
× RELATED வாசிப்பும் வழிபாடுதான்…