×

தாம்பூலம் தரிக்க வாருங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சீதையைக் கண்டு வந்து, சீதையின் நிலையைச் செப்பிய அனுமனுக்கு ஓர் ஒப்பற்ற பரிசை வழங்க நினைத்தான் ராமன். கானகத்தில் பரிசுப் பொருளுக்கு என்ன செய்வது? அருகில் படர்ந்து கிடந்த ஓர் இலைக் கொடியை எடுத்த அனுமனுக்கு மாலையாக அணிவித்தானாம் ராமன். அந்த இலைக்கொடி வேறெதுவும் இல்லை. அது வெற்றிலைதான்.

வெற்றியின் அடையாளமாகத் திகழ்வதால் வெற்றி இலையே ‘வெற்றிலை’ என மருவியது என்பர். தமிழர் வாழ்வில் வெற்றிலை பாக்கு தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. வெற்றிலை பாக்கைத் தாம்பூலம் என்கிறது வடமொழி. ஒருவரை அழைப்பதற்குக்கூட ‘வெற்றிலை பாக்கு’ வைத்து அழைப்பதுதான் முந்தையோர் கண்ட முறை. அப்படி வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பது என்பது மதிப்பின் உச்சமாகும். அது உயர்ந்தவர்களுக்கே கிடைத்தது. உயர்ந்த துறவிகள் ஆலயப்பிரவேசம் செய்யும்போதும் அங்கு வழங்கப்படும் திருநீறு முதலிய பிரசாதங்களை அவர்களின் கையில் வழங்குவது மரியாதைக்குறைவு என்று உயர்வான வெற்றிலையிலும் பிற இலைகளிலும் வைத்துக் கொடுப்பது இன்றும் தொடர்ந்து வருகிறது.

இரு மனம் இணையும் திருமணத்திற்கான நிச்சயம்கூட வெற்றிலை பாக்கை வைத்துத்தான் தமிழர்கள் நடத்தினார்கள். அது ‘நிச்சயத் தாம்பூலம்’ என்றே அழைக்கப்பட்டது. சில சமூகங்களில் இறப்பின்போதுகூட வெற்றிலை பாக்கை இறந்தோர் வாயிலும் கையிலும் வைத்து வழியனுப்பி வைப்பதும் வழக்கத்தில் உள்ளது.

மனித வாழ்வோடு மட்டுமின்றி இறை வழிபாட்டிலும் வெற்றிலைக்குத் தனியிடம் தரப்பட்டிருக்கிறது. ஆயிரம் பொருட்களை வைத்துப் படைத்தாலும், வெற்றிலை பாக்கு வைத்துத் “தாம்பூலம் சமர்ப்பயாமீ” என்று வழிபடுவதும் வழக்கிலுள்ளது.அன்னை லலிதாவின் கொஞ்சும் கொவ்வைச் செவ்வாயின் செம்மை அழகை லலிதா சகஸ்ரநாமம் வர்ணிக்கிறபோது, “தாம்பூல பூரித முகி” என்ற ஸ்லோகத்தால் வெற்றிலை பாக்கு போட்டு, அதனால் சிவந்த வாயை உடையவள் என்கிறது. உண்ணும் உணவு, பருகும் நீர் ஆகியவற்றுடன் இளைப்பாற இட்டுக்கொள்ளும் வெற்றிலையுங்கூட தனக்கு நாராயணன்தான் என்பதை,

“உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை”

– என்று பாடுகிறார் ஆழ்வார்.

இந்த வெற்றிலை பாக்கானது தமிழர் வாழ்வில் உணவுப் பொருளுக்குப்பின் எடுத்துக்கொள்ளும் உயர்ந்த மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. வாயில் கேன்சர் வந்துவிடும், பற்கள் கறையாகிவிடும் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போட்டு, வாயில் வெற்றிலையைப் போடவிடாமல் நிறுத்திவிட்டது இன்றைய நவீனம். ஆனால் ஒன்று, வெற்றிலை பாக்கு போட்ட காலத்தைவிட, வெற்றிலை பாக்கு போடாத இந்தக் காலத்தில்தான் புற்றுநோய் புற்றீசல்போல் பெருகியிருக்கிறது.மூன்று நேரமும் உணவு உண்டதன்பின் முறையே வெற்றிலை பாக்குப் போடுவதை முறையாக மேற்கொண்டனர் நம் முந்தைய தலைமுறையினர். வேளா வேளைக்கு எப்படி வெற்றிலை போடவேண்டும்? என்பதைப் “பதார்த்த குண சிந்தாமணி’’ குறிப்பிடுகின்றது.

காலைநேரத்தில் பாக்கு அதிகமாகவும், உச்சிப்பொழுதில் சுண்ணாம்பு சற்றே உச்சமாகவும், இரவு நேரத்தில் வெற்றிலை அதிகமாகவும் போடவேண்டும் என்றும், அப்படி போடும்போதும் முதலிலும் மறுமுறையும் ஊறும் உமிழ்நீரை உமிழ்ந்துவிட்டு அடுத்தடுத்து வருகின்ற உமிழ்நீரையே உட்கொள்ள வேண்டும் என்பதை,

“காலை பிளவதிகம் கட்டுச்சி நீறதிகம்
மாலை இலையதிகம் வானுதலே – சாலவே
ஆம்போது நீரிறக்க லாகாது சொன்னேன் கேள்
தாம்பூலம் கொள்வார் தமக்கு”

என்று பதார்த்த குண சிந்தாமணிப் பாடல் பகர்கிறது.

அறுசுவையில் துவர்ப்புச் சுவையும் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. அந்தத் துவர்ப்புச் சுவையையுடைய உணவுப் பொருட்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆகவே, அச்சுவையை உடலுக்குத்தர ஆன்றோர் செய்த அற்புத ஏற்பாடே வெற்றிலையோடு பாக்கினைச் சேர்த்து இடுவது. அந்தப் பாக்கை காலை நேரத்தில் அதிகமாக இடவேண்டும். அதற்குக் காரணம், பாக்கில் பித்தத்தைப் போக்கும் குணம் இருக்கிறது.

அது காலை முதல் மதியம் வரை அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படும் பித்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். அதேபோல், மதிய உணவின்பின் வாதம் ஏற்படும். அந்த வாதத்தோடு வாதிட்டு அதைக் கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் சுண்ணாம்புக்கே உண்டு என்பதால் அதை மதிய வேளையில் அதிகமாக இடவேண்டும். மேலும், இந்தச் சுண்ணாம்பில் கேல்சியம் சத்து மிகுந்துள்ளது. உடலுக்குத் தேவையான கேல்சியத்தை உலகிலேயே நேரடியாகச் சுண்ணாம்பின்மூலம் எடுத்துக்கொள்ளும் முறை தாம்பூலம் இடும்முறை மட்டுமே.

இரவு நேரமானது குளிர்ச்சியான சூழ்நிலை உண்டாகி கபம் அதிகரிக்கும் நேரமாகும். அந்த நேரத்தில் கபத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வெற்றிலையை அதிகமாக இடவேண்டும். குழந்தைகளுக்குக் கபம் மிகும்போது வெற்றிலையுடன் துளசியின் சாறு பிழிந்து தருவதும் முந்தைய தலைமுறை மேற்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும்.

அதுமட்டுமின்றி, வெற்றிலையிலுள்ள Hydroxy chovicol என்னும் phenol compound ஆனது ஆண்களின் Prostateஐ வலுப்படுத்துவதுடன், அது சம்பந்தமாக வரும் புற்றுநோயையும் தடுக்கிறது. விந்தின் வீரியத்தன்மை வலுப்பட தாம்பூலம் பலவகையில் உதவி செய்கிறது. அதனால்தான் கணவனுக்குக் காதல் மனைவி தாம்பூலம் ஊட்டிவிடும் பழக்கம்கூட உண்டாகியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. மேலும், தாம்பூலம் மடித்துக் கொடுத்துவிட்டு, கணவன் அதை இட்டு, அதனால் உண்டாகும் நாக்குச் சிவப்பைக் கண்டு, அது எந்த அளவுக்குச் சிவந்து இருக்கிறதோ, அந்த அளவிற்குக் கணவன் தன்மீது அன்பு வைத்திருக்கிறான் என்பதை எடைபோட்டனர்.

தாம்பூலம் தரித்த காலத்தில் பெண்கள் நன்கு கர்ப்பம் தரித்தனர். தாம்பூலம் தரிப்பதை விட்டுவிட்ட இப்போதுதான் கருத்தரிப்பு மையங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிலை பாக்குப் போட்டால் வாயில் கறை ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால், குழந்தைப்பேறு இல்லையென்பது வாழ்க்கையில் நம் வலிமைக்கு ஏற்படும் கறையல்லவா? முந்தைய கறை, முகம் சார்ந்தது. பிந்தைய கறை, அகம் சார்ந்தது. அந்த அகக்கறை போக, சற்றே தாம்பூலம் தரிப்பதில் அக்கறை காட்டினால் போதும். அகக்கறை போய்விடும். அகம் என்றாலேயே இல்லறம்தான். ஆம்.

தாம்பூலம் இல்லறத்தார்க்கே இன்றியமையாதது. துறவறத்தார் தாம்பூலம் தரிக்கலாகாது என்று புரட்சித்துறவி வள்ளலாரே குறிப்பிட்டிருக்கிறார். எந்த வயது வரைக்கும் தாம்பூலம் தரிக்கலாம்? பாக்கைக் கடிக்க முடியாத, பல்லில்லாத பாட்டிகளும்கூட அழகிய வெங்கலச் சுட்டியில் இட்டு ‘லொட்டு லொட்டு’ என்று கொட்டி பின் இட்டுக்கொள்வர். நம் முன்னோர்களுக்கு தாம்பூலத்தின்மீது எப்போதும் ஒரு தாழாத பிரியமுண்டு. அதைச் செல்லக் குழந்தைகளாகவே பாவித்தனர். அவர்கள் வெற்றிலை பாக்கு வைத்திருக்கும் பெட்டிக்கே செல்லமாக ‘வெற்றிலை செல்லம்’ என்று பெயர் வைத்திருந்தனர். அதிலிருந்து வெற்றிலையை எடுத்து முறையே, அவர்கள் இடும் அழகோ அழகுதான். தாம்பூலத்தை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பதையும் பதார்த்த குண சிந்தாமணி சொல்லியிருக்கிறது.

“மேற்றலையும் கீழ்க்காம்பும் வெந்நரம்பும் வெண்பல்லைத் தீத்தாமல் வெற்றிலையைத் தின்று”என்ற பாடல்வரிகள் வெற்றிலையின் நுனியையும் காம்பையும் கிள்ளிவிட்டு, முதுகு நரம்பையும் நகத்தால் நளினமாக உரித்துவிட்டு இடவேண்டும் என்கிறது. காரணம், கொடி வகைகளில் பரவும் கிருமிகள் அதன் காம்பிலிருந்தே இலை முழுவதிலும் படரும். அந்தக் கிருமிகளெல்லாம் போகவேண்டும் என்றே இலையைச் செப்பம் செய்து இடும் முன்னெச்சரிக்கைக் குணம் நம் முன்னோரிடம் இருந்தது.

தாம்பூலத்தில் கிராம்பு, சாதிக்காய், ஏலக்காய், இலவங்கம் போன்றவை சேர்த்து இட்டுக்கொள்ளும் வழக்கமும் உண்டு. கிராம்பு, சாதிக்காய் போன்றவை கபத்தைக் கட்டுப்படுத்தி, குரல் வளத்தைச் செறிவாக்கி, ஏலம், இலவங்கம் போன்றவை வயிற்றில் ஜீரணத்துடன் வாயில் நறுமணத்தையும் தந்தன. இதுமட்டுமின்றி, தாம்பூலத்தின் மூலப் பொருளிலும் சில அழகியலைக் கண்டனர் நம் முன்னோர். வெற்றிலையிலும் கொழுந்து வெற்றிலைக்கே முன்னுரிமை வழங்கினர். பாக்கைக் கலை நயம்மிகு சீவலாகச் சீவி இட்டனர். வெள்ளைச் சுண்ணாம்பைச் சற்றே செந்நிறமாக்க, அதில் இளநீரும் எலுமிச்சையும் சேர்த்துப் பக்குவப்படுத்தி இட்டுக் கொண்டனர்.

இத்தனை சொன்ன பிறகும்…

வெற்றிலை பாக்கை வெறுப்போர் சொல்லும் ஒரே காரணம், பல் கறையாகிவிடும் என்பதுதான். அதற்கும் ஒரு வழியுண்டு. வெற்றிலையைக் கடித்து மென்றால்தானே கறை ஏற்படும்! குடித்துவிட்டால். ஆம், மிக்சியில் இட்டு அரைத்து அளவாகக் குடித்துவிட்டால் கறை படியும் என்ற கவலையும் இல்லை; தாம்பூலத்தைக் கஷ்டப்பட்டு கடிக்கவும் வேண்டியதில்லை. ஆனால், என்னதான் கறை என்றாலும் பக்க விளைவுகளுடைய லிப்ஸ்டிக் போட்டுச் சிவக்கும் உதட்டைவிட, வெற்றிலை பாக்கு போட்டுச் சிவக்கும் உதடுகள் அழகானவைதான்.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post தாம்பூலம் தரிக்க வாருங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kunkum ,Sita ,Hanuman ,Dinakaran ,
× RELATED கவுன்சலிங் ரூம்