×

தருவைகுளம் – வேப்பலோடை இடையே குண்டும், குழியுமான இசிஆர் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

குளத்தூர்: தருவைகுளம் -வேப்பலோடை இடையே கிழக்கு கடற்கரை சாலை குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குளத்தூர் வழியாக வேப்பலோடையில் இருந்து தருவைகுளம் வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இச்சாலை ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரியை இணைக்கும் முக்கிய போக்குவரத்து சாலையாகும். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படும். மேலும் இந்த சாலையோரம் தனியார் கம்பெனிகள், உப்பளங்கள் அதிகமாக உள்ளதால் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் வேப்பலோடை – தருவைகுளம் இடையே கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. மேலும் சாலையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களும் அகற்றாமல் அப்படியே விடப்பட்டதால் சாலையின் இருபுறமும் அடைத்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. எனவே முக்கிய வழித்தடமான இசிஆர் சாலையை விரைந்து சீரமைப்பதோடு, சாலையோர சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டுமென வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் இருந்து தூத்துக்குடி, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், வேப்பலோடை -தருவைகுளம் இடையிலான சுமார் 10 கிமீ தூரத்திற்கு எவ்வித சீரமைப்பும் இல்லாமல் சாலை படுமோசமாக உள்ளது. குறிப்பாக தருவைகுளத்தை ஒட்டி சல்லடையாக உள்ளது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாமல் ஓடைக்குள் செல்வதுபோல் சாலை உள்ளது. மேலும் சாலையின் இருபுறம் உள்ள சீமை கருவேல மரங்களால் சாலை வளைவுகளில் வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை.

மேலும் சீமைகருவேல மரத்திற்குள் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் திடீரென சாலைக்குள் பாய்வதால் அருகில் வந்த வாகனங்கள் விபத்துகளை தவிர்க்க பிரேக் அடிப்பதும், இல்லையேல் சாலை பள்ளங்களில் சிக்கி விபத்துக்கு உள்ளாகுவதும் தொடர் கதையாக உள்ளது. இதனால் சாலை விபத்துகளை தவிர்க்கும் விதமாக பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவும், சிதிலமடைந்த இச்சாலையை துரிதகதியில் சீரமைப்பதுடன், சாலையோர சீமைக்கருவேல மரங்களையும் அகற்ற வேண்டும், என்றனர்.

The post தருவைகுளம் – வேப்பலோடை இடையே குண்டும், குழியுமான இசிஆர் சாலை: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Daruwaikulam ,Veppalodai ,Kulathur ,Veppelodai ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு