×

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு..முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் பறிமுதல் : சி.ஆர்.பி.எஃப் படையினருக்கு அனுமதி மறுப்பு!

மதுரை : மதுரையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல உதவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய நடத்தி வந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி, ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம், சுமார் 15 மணிநேரம் நடத்திய விசாரணையின் முடிவில், திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்றிரவு அவரை ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து அவர் பணியாற்றிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய சோதனை நடத்தினர். மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது .பணம் வசூலித்து பங்கு பிரித்து கொடுத்தது தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கி உள்ளன. நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி சுமார் 13 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

இதனிடையே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அலுவலக பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. “உரிய அனுமதி பெற்ற பின்னரே சி.ஆர்.பி.எஃப் படையினர் உள்ள செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தமிழ்நாடு காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

The post மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு..முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள் பறிமுதல் : சி.ஆர்.பி.எஃப் படையினருக்கு அனுமதி மறுப்பு! appeared first on Dinakaran.

Tags : Madurai Enforcement ,Madurai ,Anti-Bribery Department ,Regional Assistance Office of the Enforcement Department ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி மீண்டும் ஜாமீன் கோரி மனு