×

பழநி நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்: போலீசார் எச்சரிக்கை

 

பழநி, டிச. 2: பழநி நகர் பகுதியில் சாலையோரம் பார்க்கிங் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தினால் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பழநி மலைக்கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதிகளில் சுற்றுலா வாகன பஸ் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகளவிலான வாகனங்கள் வருவதால் இடநெருக்கடி காரணமாக, பக்தர்கள் தங்களது வாகனங்களை குளத்து ரோடு பைபாஸ் சாலை, அருள்ஜோதி வீதி சந்திப்பு, அய்யம்புள்ளி சாலை, பூங்கா ரோடு மற்றும் கிரிவீதிகளில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதுபோல் குறுகிய சாலைகளில் வாகனங்களை நிறுத்திச் செல்வதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு கடும் அவஸ்தை உண்டாகிறது. இதனால் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வதை முறைப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் பலனாக தற்போது போலீசார் அடிவார பகுதி முழுமையும் சாலையோரங்களில் எச்சரிக்கை பலகைகளை வைத்துள்ளனர்.

அதில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தவிர, சுற்றுலா பஸ் நிலையத்திற்கு செல்லும் வழிகளை விளக்கும் பலகைகளும் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று பூங்கா ரோடு மற்றும் குளத்து ரோடு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்திருந்தது. போக்குவரத்து நெரிசலை குறைக்க சீசன் நேரங்களில் பழநி நகரின் புறநகர் பகுதிகளில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி நகர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம்: போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Palani Nagar ,Palani ,Dinakaran ,
× RELATED பழநி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்