×

மாநில உரிமை, மக்களுக்காக பாஜ வீழ்த்தப்பட வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேட்டி

கோவை: ‘‘மாநில அதிகாரத்தை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது’’ என்று சீதாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ம் தேதிகளில் நடந்தது. இதில் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் குறு, சிறு தொழில்களை பாதுகாக்க நிவாரணம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்துக்கு பின் சீதாராம் யெச்சூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

5 மாநில தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில், காங்கிரஸ் தெலங்கானாவிலும், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பாஜ வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 40 ஆயிரம் கார்பரேட் நிறுவனங்கள் தனது கம்பெனிகளை மூடியுள்ளது. அவைகள் வரி செலுத்தவில்லை. வேலையிழப்பு இந்தியாவில் அதிகளவில் உள்ளது. பணவீக்கம் அதிகமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த பிரச்னை பிரதிபலிக்கும். பெண்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர்.

மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செயல்படுகிறது. ஜி20 மாநாடு இந்தியா தலைமை, முன்னிலை வகிப்பதாக பிம்பம் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்த ஜிடிபியில் கடைசி (20வது) இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பாஜ வீழ்த்தப்பட வேண்டும். 5 மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழ்நாட்டில் கூட்டணி பணிகள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கப்படும். இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்வோம். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.

* அண்ணாமலை ஞான சூன்யம்
மார்க்சிஸ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிமுக, பாஜவின் ‘பி’ டீமாக செயல்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் கிடைத்த வெற்றி கூட அதிமுகவுக்கு கிடைக்காது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி பெறும்.

கோவை உட்பட ஏற்கனவே இருக்கும் 2 தொகுதிகளையும், கூடுதலான தொகுதிகளையும் கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கேட்போம். தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும். உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி துவங்கி, அண்ணாமலை வரை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. ஞான சூன்யமாக இருக்கிறார். தொழில் துறையினருக்கு மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என தொடந்து வலியுறுத்துவோம்’’ என்றார்.

The post மாநில உரிமை, மக்களுக்காக பாஜ வீழ்த்தப்பட வேண்டும்: சீதாராம் யெச்சூரி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Sitaram Yechury ,Coimbatore ,Union government ,Marxist Communist Party’s… ,Dinakaran ,
× RELATED வாக்கு சதவீத முரண்பாடு கவலை தருகிறது: சீதாராம் யெச்சூரி