×

புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு ரேஷன் கடைகள் ஏன் இல்லை? கவர்னரை பெண்கள் முற்றுகை: பதில் சொல்ல முடியாமல் தமிழிசை ‘எஸ்கேப்’

பாகூர்: ‘புதுச்சேரியில் ரேஷன் கடைகளை ஏன் திறக்கவில்லை’ என்று கவர்னரை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற நிகழ்ச்சி பாகூர் கிழக்கு பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில், கவர்னர் தமிழிசை, கலெக்டர் வல்லவன், துணை கலெக்டர் மகாதேவன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண், ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும்போது அங்கிருந்த பெண்கள் திடீரென மேடைக்கு சென்று தமிழிசையை முற்றுகையிட்டு, ‘இந்தியா முழுவதும் ரேஷன் கடைகள் உள்ளன. ஆனால் புதுச்சேரியில் மட்டும் தான் ரேஷன் கடைகள் இல்லை. ரேஷன் கடையை எப்போது திறக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி, மாதம்தோறும் 5 கிலோ அரிசி ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இங்கு ரேஷன் கடைகள் இல்லை என்பதால் நீங்கள் எதன் மூலமாக மக்களுக்கு அரிசியை வழங்குவீர்கள்? மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய ரேஷன் கடையை மூடிவிட்டு, நீங்கள் எந்த திட்டத்தை வழங்கி சாதிக்கப் போகிறீர்கள்?’ என்று சரமாரியாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அப்போது தமிழிசை, ‘இந்த விவகாரம் குறித்து அப்புறம் பேசிக் கொள்ளலாம். பிறகு இதற்கான பதில் சொல்கிறேன்’, என்றார். ஆனாலும் அங்கிருந்த பெண்கள் கவர்னரிடம் மீண்டும் ரேஷன் கடை பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெண்களிடம் தமிழிசை, ‘புதுச்சேரி மக்கள் பணத்தைத்தான் விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறிவிட்டு ரேஷன்கடை திறப்பது குறித்து எந்த பதிலும் சொல்லாமல், அவசரம் அவசரமாக கிளம்பி விட்டார்.

* புதுச்சேரியில் போட்டி?
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நாகாலாந்து மாநில உதயநாள் விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு, அம்மாநில மக்களுடன் சேர்ந்து நடனமாடினார். பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறுகையில், ‘கவர்னராக பதவியேற்ற நாள் முதல் புதுச்சேரியை எனது குழந்தையை போல் பார்த்து பணியாற்றி வருகிறேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கவர்னர் தெலங்கானாவுக்கு செல்வது இல்லை என்று கூறியிருக்கிறார்.

அந்த அளவுக்கு புதுச்சேரி மாநிலத்தின் மீது அன்பு கொண்டு பணியாற்றி வருகிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பிறகு அறிவிப்பேன். தற்போது கவர்னராக இருப்பதால் அது குறித்து பேச முடியாது. தேர்தலில் போட்டியிடுவது என்பது தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்’ என்றார்.

The post புதுச்சேரி அரசு விழாவில் பரபரப்பு ரேஷன் கடைகள் ஏன் இல்லை? கவர்னரை பெண்கள் முற்றுகை: பதில் சொல்ல முடியாமல் தமிழிசை ‘எஸ்கேப்’ appeared first on Dinakaran.

Tags : Puducherry government festival ,Tamilisai ,Bagur ,Puducherry ,
× RELATED தமிழ்நாடு காங். தலைவர்...