×

அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா. வளர்மதியின் ஊழல் வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க எந்தவித தடையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பா.வளர்மதி, அவரது கணவர் மற்றும் மகன்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன. இந்த வழக்கில், இவர்கள் அனைவரையும் விடுவித்து, ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.

மேற்கண்ட வழக்கை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பா. வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பா. வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்து குவிப்பு வழக்கு கடந்த பத்து ஆண்டுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சரியானது இல்லை என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பா. வளர்மதியின் மேல் முறையீட்டு மனுவிற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 4வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பிக்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட பா. வளர்மதி தரப்பு வழக்கறிஞர்,‘‘சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது என நீதிபதி கூறினார்.

The post அதிமுக மாஜி அமைச்சர் வளர்மதி மீதான ஊழல் வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Varamati ,Supreme Court ,New Delhi ,P. High Court ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...