×

கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தோனேசியாவில் இருந்து 5 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி: ஒன்றியஅரசின் அனுமதியை பெற்றது மின்வாரியம்

சென்னை: கோடை கால மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்தோனேசியாவில் இருந்து 5 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு மின் வாரியம் அனுமதி பெற்றுள்ளது. 4,320 மெகாவாட் திறனில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மின் நிலையங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் நிலக்கரியை தவிர்த்து கூடுதலாக மின் தேவை இருக்கும்போது வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்யும். இந்த ஆண்டு, கோடைகால மின் தேவையை சமாளிக்க இந்தோனேசியாவில் இருந்து 5 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒன்றிய அரசின் அனுமதி தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களுக்காக, ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி வயல்களின் தல்ச்சர் மற்றும் ஐபி பள்ளத்தாக்கு சுரங்கங்களிலிருந்தும், தெலங்கானாவில் உள்ள சிங்கரேனி சுரங்கங்களிலிருந்தும் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தின்படி, 60,000 டன் நிலக்கரி கிடைக்கும். ஆனால், நாடு முழுவதும் நிலக்கரி தேவை அதிகரித்துள்ள நிலையில், ஒடிசாவில் இருந்து 40,000 டன் நிலக்கரி மட்டுமே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு கிடைக்கிறது. இதனால், தேவையான நிலக்கரியில், 6 சதவீதத்தை இறக்குமதி செய்ய, ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.

சமீப காலமாக கோடை தேவைக்காக இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரியை தமிழகம் கொள்முதல் செய்து வருகிறது. மார்ச் மாதத்திற்குள் 5 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் தொடர்பான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய தேவை உச்சத்தில் இருந்தபோது, மின் வாரியம் டன் ஒன்றுக்கு 136 டாலருக்கு நிலக்கரியை வாங்கியது, இது ரஷ்யா-உக்ரைன் போரால் மோசமடைந்தது. இருப்பினும் இந்த கோடை காலத்தில் டன்னுக்கு 120 டாலருக்கும் கீழ் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

தென் மண்டல மின் குழுவின் அறிக்கையின்படி, தமிழகத்தின் மின் தேவை அடுத்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தினசரி சராசரியான 15,000 மெகாவாட்டை தாண்டி 18,000 மெகாவாட்டை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஏப். 20ம் தேதி மின்தேவை, 19 ஆயிரத்து 347 மெகாவாட்டாக உயர்ந்தது. அடுத்த ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இது அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோடைகால மின் தேவையை பூர்த்தி செய்ய இந்தோனேசியாவில் இருந்து 5 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி: ஒன்றியஅரசின் அனுமதியை பெற்றது மின்வாரியம் appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Union ,Chennai ,Union Government ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவாவில் பலத்த நிலநடுக்கம்