திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மழவராயனேந்தலில் ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் நவீன தொழில்நுட்பம் குறித்து ஒன்றிய அரசின் விக்சிட் பாரத் சங்கல்ப யாத்திரை மற்றும் குன்றக்குடி வேளாண் ஆராய்ச்சி மையம் சார்பில் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கருணாநிதி வரவேற்றார். இதில் மழவராயனேந்தல், திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சியின்போது, விவசாய நிலங்களுக்கு கை ஸ்பிரேயர், இயந்திர ஸ்பிரேயர் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். இதனால் நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் ஐந்து ஏக்கர் வரையே மருந்து தெளிக்க முடியும். ஆனால் ட்ரோன் மூலம் 7 நிமிடங்களில் ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு மருந்து தெளிக்கப்படும் மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்க ஏக்கருக்கு ரூ.650 மட்டும் செலவாகும் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் குன்றக்குடி வேளான் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முனைவர் செந்தூர் குமரன், உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், துணை வேளாண் அலுவலர் முனியசாமி, உதவி வேளாண் அலுவலர் கண்மணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
The post ட்ரோன் மூலம் நெற்பயிர்களுக்கு மருந்து தெளிப்பு: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.
