×

உயிர்த்துளி என்ற பெயரில் குமரி காவல்துறை சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை: எஸ்.பி. தொடங்கி வைத்தார்

நாகர்கோவில்: குமரி மாவட்ட காவல்துறை சார்பில் உயிர்த்துளி என்ற பெயரில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனையை எஸ்.பி. சுந்தரவதனம் இன்று காலை தொடங்கி வைத்தார்.குமரி மாவட்ட காவல்துறையினருக்கான நல நிதியை அதிகரிக்கும் வகையில் எஸ்.பி. சுந்தரவதனம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதையடுத்து போலீஸ் குடியிருப்புகள் மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பலன் அளிக்கும் வகையிலான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், தண்ணீர் விற்பனை தொடங்கி உள்ளது.

போலீஸ் குடியிருப்பில் உள்ளவர்களுக்காக ஆயுதப்படை மைதானத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.5 லட்சம் செலவில் தொடங்கப்பட்டு இயங்கி வந்தது. ஆயுதப்படை குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தவிர நேசமணிநகர் காவல் நிலைய குடியிருப்பு வளாகத்தில் சுமார் 100 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் உள்ள போலீஸ் குடும்பத்தினர், இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் சமீபத்தில் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்த எஸ்.பி. சுந்தரவதனம், சுத்திகரிப்பு நிலையத்தில் போலீஸ் குடும்பத்தினர் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி வெளி மார்க்கெட்டுக்கும் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். இதன் மூலம் கிடைக்கும் நிதி, போலீஸ் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார். எஸ்.பி.யின் உத்தரவின் படி தற்போது ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் 300 எம்.எல்., 1 லிட்டர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டை எஸ்.பி. சுந்தரவதனம் இன்று காலை தொடங்கி வைத்தார்.

உயிர்த்துளி என்ற பெயரில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. 300 எம்.எல்., மொத்த விற்பனையாக இருந்தால் ஒரு பாட்டில் ரூ.3.15க்கும், சில்லறை விற்பனையாக ரூ.4க்கும் வழங்கப்படும். 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.10க்கு விற்பனையாகும். போலீஸ் குடும்பத்தினர் தங்களது இல்லங்களில் நடக்கும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் மொத்தமாக வாங்கி கொள்ள முடியும். பொதுமக்களும் தங்களது வீட்டு விஷேச நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையை தொடர்பு கொண்டு வாங்கி கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுப்பையா, டி.எஸ்.பி. நவீன்குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுஜாதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஏற்கனவே எஸ்.பி. சுந்தவதனம் பொறுப்பேற்ற பின், நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இருந்த போலீஸ் கேண்டீன் புதுப்பிக்கப்பட்டு போலீசாருக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் சாப்பாடு கிடைக்க நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உயிர்த்துளி என்ற பெயரில் குமரி காவல்துறை சார்பில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை: எஸ்.பி. தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Kumari Police ,Vyatthuli ,S.B. ,Nagercoil ,Kumari District Police ,S.B. Sundaravathanam ,S.B. Initiated ,Dinakaran ,
× RELATED பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல்...