×

மசாலாக்களின் மறுபக்கம்

நன்றி குங்குமம் டாக்டர்

உணவியல் நிபுணர் வண்டார்குழலி

நாம் தினசரி உணவுக்காகப் பயன்படுத்தும் பல வகையான உணவுப் பொருட்களில், மசாலா என்னும் துணை உணவுப் பொருட்கள் பிரதான உணவாகப் பயன்படுத்தப்படாமல், உணவு சமைக்கும்போது, காரம், புளிப்பு, உவர்ப்பு போன்ற சுவைகளைக் கூட்டுவதற்கும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும், பிற உணவுப் பொருட்களின் இயற்கைத் தன்மைகளை உடலுக்கு ஏற்றவாறு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

மசாலா பொருட்களில் அபரிமிதமான மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளன என்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு சிறந்த கை மருத்துவமாகவும் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு அறிவியல் வளர்ச்சியின் துணையால், ஒவ்வொரு மசாலாப் பொருளிலும் இருக்கும் நுண்பொருள் என்ன, அவை எவ்வகையில் செயல்புரிந்து உடலில் இருக்கும் உபாதைகளைப் போக்குகிறது என்றும் எவ்வகையில் நன்மை செய்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அதே சமயம், அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப எப்பொருளும் அளவுக்கு மீறினால் உடலுக்குக் கெடுதல் செய்யும் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், மசாலாப் பொருட்களைப் பொருத்தமட்டில், அவற்றின் நன்மைகளை மட்டுமே மனதில்கொண்டு, தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறோமே தவிர, அவற்றின் எதிர்விளைவுகளை அல்லது அதிகரித்தால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

மேலும், இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவை உள்ளன. அதில் ஒவ்வொரு மசாலாவிற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. எனவே, இந்த மசாலாக்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும், உபயோகப்படுத்தப்பட வேண்டிய உச்சவரம்பு, அதிகரித்தால் என்ன விளைவுகளை ஏற்படுத்தும், யார் யார் அல்லது எவ்வித நோயுள்ளவர்கள் எந்த மசாலாப் பொருளைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி எல்லாம் விரிவாகத் தெரிந்துகொள்வது மிகமிக அவசியமானது. அந்தவகையில், முதலில் இஞ்சியின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்வோம்.

இஞ்சி

Zingiberaceae என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இஞ்சி, வேரிலிருந்து பெறப்படுகிறது என்றாலும், காய்வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது. Zingiber officinale என்ற தாவரப் பெயர் கொண்டுள்ள இஞ்சி, சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவாகவும் பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் பிறப்பிடம் என்று குறிப்பாகக் கூற இயலவில்லை என்றாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து பிற இடங்களுக்குக் கிடைத்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பண்டைய கால சீன, இந்திய மற்றும் ஜப்பானிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்ட இஞ்சியானது, கிரேக்க மொழியின் “gingiber”” என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலப் பெயரான “ginger” என்பதைப் பெற்றிருக்கிறது. சுமார் 1 மீட்டர் உயரம் வரை வளரும் இஞ்சிச் செடியானது, வேர் மாற்றம் அடைந்து கிழங்காகிக் கிடைப்பதே நாம் இஞ்சி என்கிறோம்.

இஞ்சியின் மருத்துவப் பயன்கள்

இஞ்சியின் மருத்துவப் பயன்கள் ஏராளமாக இருக்கின்றன. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் அஜீரணம், மந்தமான நிலை, சுவாச மண்டல உபாதைகள் போன்றவை குணமாகின்றன. இஞ்சியை அரைத்து நெற்றியில் பற்றுப்போட, ஒற்றைத்தலைவலி தீரும். காய்ச்சலின்போது இஞ்சியும் மஞ்சளும் நன்மையளிக்கும். இஞ்சிச்சாறு உடலின் கெட்ட கொழுப்பைக் குறைக்கும், வாந்தியைக் கட்டுப்படுத்தும், பித்தத்தைத் தணிக்கும், தேநீரில் கலந்து பருகும்போது தலைவலி தீர்க்கும் என்று பலவகையான நிவாரணங்களைக் கூறலாம். ஆனாலும், இஞ்சியில் அதிகப்படியான அமிலப்பொருட்களும், மருத்துவ குணமுள்ள நுண்பொருட்களும் இருப்பதால்தான் எரிச்சல் தன்மையுடன் சேர்ந்த காரத்துடன் இருக்கிறது. அதனால், இஞ்சியைப் பயன்படுத்தும்போது கவனமாகவும் இருக்க வேண்டும்.

இஞ்சியில் இருக்கும் நுண்பொருட்கள்

இஞ்சியின் phyto nutrients மற்றும் antioxidants போன்றவை அதிலிருக்கும் பிற மருத்துவ குணங்களுடன் சேர்ந்து உடலுக்கு நன்மை அளிக்கின்றன என்றாலும், அமிலங்கள் அதிகம் என்பதால், சிறிதளவு அதிகம் ஆனாலும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதலே விளைவிக்கும். இஞ்சியில் ஏறக்குறைய 477 வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதாகக் குறிப்பிடப்படும் பொருட்கள், caffeinc acid, ascorbic acid, oxalic acid, mallic acid, salicylic acid, curcumin, selenium, tryptophan, lecithin, beta carotene போன்றவையாகும்.

இவற்றுள் அமிலப் பொருட்களே அதிகம் என்பதால்தான் அமிலத்தன்மை pH – 3.5 ஆகவும், அதிகக் காரத்துடனும் இருக்கிறது இஞ்சி. இஞ்சியின் காரத்திற்கான பிரதான வேதிப்பொருட்கள் gingerol, 6-shoagaol zingeron போன்றவை. Gingerol என்பது, மிளகாயில் இருக்கும் capsaicin மற்றும் மிளகில் இருக்கும் piperine என்னும் அதிகக் காரம் மற்றும் எரிச்சல் தன்மை கொடுக்கும் வேதிப்பொருட்களுக்கு நிகரான தன்மை உடையது. இவற்றுள் salycilic என்னும் அமிலமே செரிமானம் தொடர்பான சிறு உபாதைகளை அகற்றுகிறது.

பச்சையான புது இஞ்சியில் 100 கிராமிற்கு, 75 கிராம் அளவில் Gingerol, இருக்கிறது. இஞ்சியின் பிற பொருட்களான சுக்கு (உலர வைத்த இஞ்சி), இஞ்சி எண்ணெய் போன்றவற்றிலும் இந்த நுண்பொருட்கள் உள்ளன. ஆனால், உலர வைத்தல் மற்றும் நீரில் கொதிக்க வைத்தல் போன்றவை, இஞ்சியில் இருக்கும் வேதிப்பொருட்களின் அளவைக் குறைக்கின்றன. என்றாலும் அந்தக் குறைந்த அளவே நிச்சயமாக உடலுக்குப் போதுமானது.

இஞ்சியின் உச்ச வரம்பு

ஒருவர் ஒருநாளைக்கு 2 முதல் 3 கிராம் வரையில் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நிர்ணயித்துள்ள உச்சவரம்பு 4 கிராம் அளவுதான். ஒருவேளை 5 கிராமுக்கும் அதிகமாக இஞ்சி சேர்த்துக் கொண்டால் கூட நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல் வருவதற்கு வாய்ப்புண்டு. அவ்வாறு இருக்கும் நிலையில், நிறைய தண்ணீர் குடிப்பதும், இளநீர், மோர் அருந்துவதும் எரிச்சலைக் குறைக்கும்.

ஆக, இஞ்சி கஷாயம் போடுகிறேன் என்று கைப்பிடி அளவு 50 கிராம் அல்லது 100 கிராம் அளவு கொதிக்க வைத்துக் குடிப்பதெல்லாம் இரைப்பை உள்சுவர் மற்றும் செரிமான மண்டலம் முழுவதும் இருக்கும்; mucus membrane என்னும் மெல்லிய சளிப்படலத்தில் எரிச்சல் ஏற்படுத்தி சிதைத்துவிடும் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

இஞ்சி ஊறுகாய், துவையல், பச்சடி செய்பவர்கள், வெல்லம், சர்க்கரை, தேன், தண்ணீர், காய்கள் என்ற பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து செய்வதுதான் நல்லது. அதிலும் கூட சிறிதளவு சேர்த்தாலே போதுமானது. சளி, இருமல், செரிமானமின்மை போன்றவற்றிற்குப் பயன்படுத்தினாலும், மிகச் சிறு அளவிலேயே உடலுக்குத் தேவைப்படும் அதன் நுண்பொருட்களும் மருத்துவ குணங்களும் கிடைத்துவிடும் என்பதையும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

எந்நிலையில் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும்?

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், ரத்தக் கட்டிகள் உருவாகி, ரத்தக் குழாய் அடைபடுவதைத் தடுக்கும் ரத்த இளக்கிகள் எனப்படும் blood thinners மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள். அவர்கள் எடுத்துக்கொள்ளும் aspirin, Coumadin, brilinta போன்ற மருந்துகள் இஞ்சியுடன் வினைபுரிந்து, ரத்தத்தை மேலும் திரவத்தன்மையுடன் வைப்பதால், ரத்தக்கசிவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அவர்கள் அதிக அளவு இஞ்சி அல்லது அடிக்கடி இஞ்சி உபயோகப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதிக இஞ்சி சேர்த்த உணவுகளையும் மருந்துப்பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

இஞ்சி இவற்றைச் செய்வதில்லை

இஞ்சியை விழுதாக அரைத்து முகத்தில் பூசிக்கொள்வது, இஞ்சிச்சாற்றினை தோலில் தேய்ப்பது போன்றவை எரிச்சலையும் அதிகமானால் சிறு சீராய்ப்பு போன்ற காயங்களையும் ஏற்படுத்திவிடும். திடீரென்று ஏதாவது ஒருநாள் மட்டும் உடற்பயிற்சி செய்து, பிறகு விட்டுவிடுவது அல்லது தொடர்ந்து கடினமாக பயிற்சிகளை செய்வது என்று இரண்டுமே Delayed onset muscle soreness (DOMS) என்ற தசைவலியுடன் சேர்ந்த தசை இறுக்கத்தை ஏற்படுத்திவிடும்.

இதற்கு நிவாரணமாக இஞ்சியை வாயில்வைத்து சாறு விழுங்கினால் குணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இஞ்சிச்சாறு அவ்வாறு எந்த நிவாரணத்தையும் அளிப்பதில்லை. அதேபோல், நெடுந்தூரப் பயணம் போகும்போது, வாந்தி எடுக்கும் நிலை இருப்பவர்கள், 4 மணி நேரத்துக்கு முன்னர் இஞ்சியை சாப்பிட்டால், குமட்டல் உட்பட எவ்வித motion sickness நிலையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இதுவும் உண்மையல்ல. மாறாக வயிறெரிச்சலைத்தான் ஏற்படுத்தும்.

இஞ்சிக்கு, புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மையுள்ளது என்று அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும், ஒவ்வொருவரின் உடல் தன்மைக்கு ஏற்பவும், உணவுப்பொருளின் வீரியத்துக்கு ஏற்பவும் எந்த அளவில் உடலுக்குள் செல்ல வேண்டுமோ அந்த அளவில் சாப்பிடுவதுதான் நல்லது.

The post மசாலாக்களின் மறுபக்கம் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dietician ,Vandarkuzhali ,Dinakaran ,
× RELATED உங்க பாப்பா பள்ளி செல்ல மறுக்கிறதா? காரணம் இதோ…