×

கல்லீரலில் கொழுப்பு

நன்றி குங்குமம் டாக்டர்

தடுக்க… தவிர்க்க!

கல்லீரல்தான் மனிதஉடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல்பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்புச் சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.

பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்துவிடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதனால் இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதாகவும், அதிக அளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரைநோய் மற்றும் இதய நோய்களை உருவாக்குகிறது.

அதீதமாக மது பாவிக்கும் அனைவருக்கும் (90%-100%) ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களில் மட்டுமின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.

ஒரே குடும்ப அங்கத்தவர்களிலும் பரம்பரையாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்துகின்ற பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங்களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.பொதுவாக எடை அதிகமாக உள்ளவர்களிடம் இது ஏற்படுகிறது.தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும். ஈரல் கொழுப்புக்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல. அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats – trans fatty acids) கொழுப்பு முக்கிய காரணமாகும்.இரும்புச் சத்து அதிகமாகும்போதும் இது நேரலாம்.ஹெபடைடீஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சியின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.

மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்புநோய்

இப்பொழுதெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம். ‘மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்’ (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள்.இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை அல்ல போதும் சிலரில் அது ஈரலில் அழற்சியையும் பின்னர் அதன் செயற்பாட்டுத் திறனையும் பாதித்து ஈரல் சிதைவு நோய் (Cirrhosis) ஆகலாம். அரிதாக ஈரல் புற்றுநோயும் ஏற்படலாம்.

காரணங்கள்

மது இல்லாமலும் ஈரலில் கொழுப்பு ஏன் விழுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.ஆயினும் அதிக மற்றும் அதீத எடையுள்ளவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இது பரம்பரையிலும் ஒரே குடும்பத்தவர்களிலும் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினரைப் பாதிக்கிறது. அத்துடன் கொலஸ்டரோல் அதிகரிப்பு, நீரிழிவு அல்லது நீரிழிவின் முன்நிலையும் சேர்ந்திருப்பதுண்டு.

வைரஸ் ஈரல் அழற்சி நோய்கள், சில மருந்துகள், போஷாக்கற்ற உணவுமுறை, திடீரென எடை குறைதல் போன்றவையும் காரணமாகலாம். உணவுமுறையே முக்கிய காரணமாகும்.
எடை அதிகரிப்பதற்கும், ஈரலில் கொழுப்பு விழுவதற்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் பிரதான காரணமாகும். அதிலும் முக்கியமாக ட்ரான்ஸ் (Trans fats – trans fatty acids) கொழுப்பு அதிக
பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான கடைப் பண்டங்களிலும், துரித உணவுகளிலும் இது அதிகம் இருக்கிறது.

இந்த ட்ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?

தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைட்ரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும்போதே Trans fats உருவாகிறது.

ட்ரான்ஸ் கொழுப்பை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?

விலை குறைவாக இருப்பதுடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். அத்துடன் அச்சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும். வதக்கும், வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், நமது உணவு வகைகளில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.

அப்படியானால் நாம் அத்தகைய உணவுகளை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம்.ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ட்ரான்ஸ் கொழுப்பாக இருக்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்றவற்றில் இந்த ட்ரான்ஸ் கொழுப்பு சிறிதளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்துவிடுவதால் ஏனைய ட்ரான்ஸ் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;

ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் மருந்துகளை நாடி ஓடக்கூடாது. எமது உணவு உடற்பயிற்சி அடங்கலான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே முக்கியமானது
எடை குறைப்பு ஈரல் கொழுப்பிற்கான சிகிச்சையின் முக்கிய அம்சம் எடையைக் குறைப்பதுதான். எடைக் குறைப்பைப் பற்றிப் பேசும்போது ஒருவரது உயரத்திற்கான மிகச் சிறந்த எடைக்கு (Ideal weight) வர வேண்டும் என்பதல்ல. பெரும்பாலானோரில் அது முடியாத காரியமாகவும் இருக்கும். தங்களது தற்போதைய எடையில் 10 சதவிகிதத்தைக் குறைப்பதே மிக நல்ல பலனைக் கொடுக்கும். 5 சதவிகிதம் குறைத்தாலும் நன்மையே. எனவே எடை குறைப்பு முயற்சியில் தளரக் கூடாது.

எடை குறைப்புச் செய்ய முனையும்போது திடீரென கடுமையாகக் குறைப்பதும் நல்லதல்ல. ஒரு வாரத்திற்கு 1.5 கிலோ எடைக்கு மேலே குறைக்க முயல்வது உசிதமானதல்ல. எடை குறைப்பின் முக்கிய அம்சங்களாவன உண்ணும் உணவின் கலோரி அளவைக் குறைப்பதும் உடற்பயிற்சியை அதிகரிப்பதும்தான்.உணவைக் குறைப்பது என்பது பட்டினி கிடப்பதல்ல. உணவு முறை மாற்றங்கள்தான். உணவில் அதிக கலோரி வலுவைக் கொடுப்பது எண்ணெய்க் கொழுப்பு உணவுகள்தான். அதிலும் ட்ரான்ஸ் கொழுப்பு உணவுகள் பற்றி ஏற்கனவே சொன்னோம்.

ஆசிய நாட்டவர்கள் ஆகிய நம் உடலில் மேலை நாட்டவர்களின் உடலில் இருப்பதை விட அதிக கொழுப்பு இருக்கிறது. இந்தக் கொழுப்பானது ஈரல் வயிற்று உறுப்புகளில் மட்டுமின்றி நமது சருமத்திலும் இருக்கிறது. இவ்வாறு கொழுப்பு அதிகமாயிருப்பதற்கு கொழுப்பு உணவுகள் மட்டும் காரணமல்ல. நாம் பிரதானமாக உண்ணும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுகளை அதிகளவில் உண்பதே காரணமாகும். அதாவது சோறு, இடியப்பம், பிட்டு, போன்ற எல்லா மாச்சத்து உணவுகளை அதிகமாக உண்கிறோம்.எனவே நாம் எடையைக் குறைக்க வேண்டுமாயின் மாச்சத்துள்ள உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். குறைத்த அளவிற்கு ஈடாக காய்கறிகளையும் பழவகைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனால் பசியை அடக்கும் அதே நேரம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கமுடியும்.

ஈரல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஒமேகா 3 மீன் எண்ணெய் (omega-3 fatty acids) உதவும் என நம்பிய போதும் அதற்கான திடமான விஞ்ஞான ஆய்வுகள் இல்லை. ஈரலில் குத்தி திசுக்களை எடுத்து ஆய்வு செய்து (Biopsy) ஈரல் கலங்களில் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்தால் விட்டமின் ஈ (Vitamin E) கொடுப்பதுண்டு. ஏனையவர்களில் அவசியமில்லை.
எடையைக் குறைப்பதற்கு சத்திர சிகிச்சை உதவும் என்ற போதும் கொழும்பு ஈரல் பிரச்சனைக்காக அதைச் செய்வது நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரல் சிதைவு (cirrhosis) ஏற்பட்டால் செய்வது நல்லது என்கிறார்கள்.

வேறு பரிசோதனைகள்

ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்ததும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன்நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். மதுப்பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை. இருந்தபோதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசியமல்ல. அதேபோல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தினர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை.

வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயன குளிர்பானங்களை அருந்தக் கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்க்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய்ப் பால் அருந்தலாம்.

கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவஉணவே சிறந்தது. கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜுஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவதன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும். வெள்ளைப் பூசணிக்காய் சாறு ரத்தத்திலுள்ள கொழுப்பை அகற்றும். தினமும் சாப்பிட்ட பின்பும் இரவு தூங்க போகும் முன்பும் சுடு தண்ணீர் குடித்தால் உணவிலுள்ள கொழுப்பு உணவுப் பாதையிலுள்ள கொழுப்புகள் கரைந்துவிடும்.

மிளகும் எலுமிச்சைச் சாறும் சேர்த்த நீரை அதிகமாக எடுத்துக் கொண்டால் கல்லீரலின் செல்கள் பலமடையும். மஞ்சள் காமாலைக்கு நல்லது. சத்துள்ள ஆகாரத்தால் கல்லீரலை புதுப்பிக்க முடியும். பூண்டை தினசரி சமையலில் சேர்ப்பது நல்லது. சீரகப்பொடி கலந்த மோர் ஜீரணத்தை மேம்படுத்தும். எனவே உங்களுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.

தொகுப்பு: சரஸ்

The post கல்லீரலில் கொழுப்பு appeared first on Dinakaran.

Tags : kumkum ,Dinakaran ,
× RELATED கொழுப்பு அமிலம் அறிவோம்!