×

எனது பெண்மையை அம்மா ரசிக்க ஆரம்பித்தார்

நன்றி குங்குமம் தோழி

திருநங்கை அஜிதா

‘‘10ம் வகுப்பு வரை ஆணுடையில் மாணவனாகப் பள்ளிக்கு சென்ற நான், அதே பள்ளியில் +1 வகுப்பில், பெண் சீருடை அணிந்து அஜிதாவாக பள்ளிக்குள் நுழைந்தேன்’’ என ரொம்பவே ஆச்சரியப்படுத்தினார் திருநங்கை மாணவி அஜிதா.வடகோவை மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் +1 படிக்கும் அஜிதா எல்லோரும் வியந்து பார்க்கும் மாணவியாகவே இருக்கிறார். காரணம், அவரின் பேச்சுகள் தன்னம்பிக்கையும், தெளிவுமாக இருக்கிறது. யார் மீதும் குற்றம் சுமத்தாமல், என் அம்மா என்னை ஏத்துக்கிட்டாங்க… ஆசிரியர்கள் ஏத்துக்கிட்டாங்க… பள்ளியும் ஏற்றுக்கொண்டது… உடன் படிக்கும் மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர்… அக்கம் பக்கமும் ஏற்றுக்கொண்டது என இயல்பாகப் பேசியவரை இடைமறித்து, எப்படி இத்தனையும் சாத்தியமானது என மேலும் வியப்பை வெளிப்படுத்தியதில்..!!

“என் கம்யூனிட்டி பிரிவிலெஜ்ட். எனக்கு இது நடந்தது, அது நடந்தது எனச் சொல்வதில் என்ன இருக்கிறது? இது எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தானே. எனக்கு சிம்பத்தி வேண்டாம். நான் படித்து, தேர்வு எழுதி உயர் பதவியில் அமர்ந்தால் இந்த உலகம் என்னை மதிக்கத்தானே போகிறது” என்கிற அஜிதாவுக்கு, இந்திய ஆட்சிப்பணியில் தேர்வெழுதி ஐ.பி.எஸ் ஆகவேண்டும் என்பதே கனவாக இருக்கிறது.

“கோவை மாநகர ஆயுதப்படையில் என் அம்மாவிற்கு கடைநிலை ஊழியர் பணி. அவர் பணி செய்யும் இடத்தில் காவல்துறை பெண் உயர் அதிகாரிகளை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் நடையும், கம்பீரமும், பேச்சும் எனக்கு பிடிக்க ஆரம்பித்தது. எனக்குள்ளும் போலீஸ் அதிகாரி கனவு ஆக்கிரமிக்கத் தொடங்கியது” என்கிற அஜிதா, கூடவே, “என் பெண்மையை கம்பீரத்தோடு வெளிப்படுத்த சரியான வேலை காவல்துறைதான் எனப்பட்டது” எனத் தெளிவான உச்சரிப்பில் அழுத்தமாகவே பேசுகிறார்.

‘‘என் பெண்மையை முழுமையாக வெளிப்படுத்தும் ஆர்வத்திலேயே நடிப்பிலும் இருக்கிறேன். கடந்த ஆண்டு மத்திய அரசு நடத்திய கலா உத்சவ் போட்டியில் பங்கேற்று மாவட்ட மற்றும் மாநில அளவில் முதலிடம் பெற்றதுடன், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஒடிசா சென்றேன். அங்கும் முதலிடம் கிடைத்தது. இப்போது சிறந்த மாணவர்கள் பட்டியலில் அஜிதா என்கிற எனது பெயரும் இருக்கிறது’’ என்கிறார் புன்னகைத்து.

‘‘அதேபோல், கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு நடத்திய கலைத்திருவிழாவில் பங்கேற்று, சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கண்ணகியின் பாத்திரத்தை மேனோ ஆக்டிங் செய்ததில் எனக்கு மாநில அளவில் முதலிடமும், தமிழக முதல்வரின் கரங்களில் சான்றிதழும் விருதும் கிடைத்தது. கலைத்திருவிழாவில் வெற்றி பெற்றவர்களை தமிழக அரசு மலேசியா அழைத்துச் சென்றதில், 21 மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றோம்.

இதில் கோவையில் இருந்து நாங்கள் 8 மாணவர்கள் சென்றதில், எங்களுடன் இணைந்து கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் பயணித்தார். இதில் திருநங்கையாக பயணித்தது நான் மட்டுமே’’ என்கிற அஜிதாவிற்கு அப்பா கிடையாது சிங்கிள் பேரன்டாக அம்மா மட்டுமே இருக்கிறார்.‘‘என் அம்மாவும் அப்பாவும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவருக்குள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருக்கவே, இரு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்காமலே, தனித்துவிடப்பட்ட நிலையில் இருவரும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோதே அப்பா திடீரென இறந்துவிட, அப்பாவின் இறப்பிற்குப்பின் அவரின் அடையாளத்தையும் வெளிப்படையாக பயன்படுத்த முடியாத நிலை அம்மாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. எங்களின் பாதுகாப்பு கருதி, கேரள மாநிலம் பாலக்காடு சென்று கிடைத்த வேலைகளை எல்லாம் அம்மா செய்யத் தொடங்கினார். அப்போது அம்மாவின் அம்மாவான என் பாட்டி மட்டுமே எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

ஆரம்பத்தில் ஆண் உடை எனக்கு வேண்டாம், பெண் உடைதான் வேண்டும் என்றபோது அதை அம்மா விளையாட்டாக எடுத்துக்கொண்டார். ஆனால் வளர வளர பெண்ணுக்குரிய நளினத்தோடு நான் நடப்பது, பேசுவது, செயல்படுவது எனத் தொடர்ந்தபோது, என்னைத் தீவிரமாகக் கண்டிக்க ஆரம்பித்தார். துவக்கத்தில் அம்மாவால் என் நிலையை சுத்தமாக புரிந்துகொள்ள முடியவில்லைதான். பெரும்பாலும் என்னை மாற்றும் முயற்சிகளையே கையில் எடுத்தார்.

இந்த நிலையில், டிக்டாக் செயலி வழியே ஜெர்மனியில் பணியாற்றும் பல் மருத்துவரான திருநங்கை தனுஜா அம்மம்மாவின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் மூலமாகவே பல திருநங்கை சகோதரிகளும் எனக்குக் கிடைத்தனர். அதன்பிறகே என் எல்லைகள் விரிவடையத் தொடங்கியது. என் நிலை குறித்த தெளிவும் கிடைத்தது. அதுவரை தனிமையில், கற்பனைத் தோழிகளோடு விளையாடிய என் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி விழ, தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலி வழியே குடும்பமாகவும் நாங்கள் இணைந்தோம். சென்னையில் தங்கியிருந்து தோல் மருத்துவம்(dermatology) படித்துவரும் மருத்துவர் ரக்ஷிதாம்மா என்னை அவரது மகளாக ஏற்றுக்கொண்டார். கற்றவர்கள் பலரின் வழிகாட்டுதல்கள் சேர்ந்துதான் அஜிதாவாக மாறிய நான், நம்மைப்போல் மாற்றுப் பாலினத்தவருக்கு கல்வி மிகமிக முக்கியம் என்பதை இவர்கள் எல்லோரும்தான் எனக்குத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

8ம் வகுப்பு வரை கேரள அரசுப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்துவந்த நான், தமிழகம் வரவேண்டிய நிலையும் ஏற்பட்டதும்,திருநங்கையான எனக்கு தமிழகத்திலும் அரசுப் பள்ளிதான் பாதுகாப்பு என நினைத்தேன். காரணம், அரசுப் பள்ளியில்தான் ஆசிரியர்கள் என்னைப் போன்ற மாணவர்களை வெளியே போ எனத் தள்ள மாட்டார்கள். அதுவும் எனது தலைமை ஆசிரியர் என்னை சரியாகப் புரிந்துகொண்டார். எனக்கு பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் என அம்மா சொன்னதை, நான் திருநங்கை எனச் சரியாகப் புரிந்துகொண்டவர் என் தலைமை ஆசிரியர் புனிதா.

நான் படிக்கும் வடகோவை மாநகராட்சிப் பள்ளியில் கல்வியோடு சேர்ந்து திறமைகளும் வெளிப்படும் வாய்ப்புகளும் எனக்கு அமைந்தது. சரியாக அவற்றை நான் பயன்படுத்திக் கொண்டதில், வெற்றிகள் பலவும் என்னைத் தேடி வந்தது. எனது சாதனைகள்தான் பலரின் பார்வையை என் மீது திருப்பியது.ஒரு கட்டத்தில் என் அம்மாவிடம், திருநங்கை ரேவதி அம்மா எழுதிய “வெள்ளை மொழி” புத்தகத்தைக் கொடுத்து என் நிலை இதுதான், எனக்கும் இதுதான் வேண்டும் என்பதை அழுத்தமாகவே சொன்னேன். நான் சொல்வதை அம்மா புரிந்து கொண்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார். பிறகு காவல்துறை உயர் அதிகாரிகள் சிலர், அம்மாவிடத்தில் இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், உங்கள் குழந்தையை சரியாக புரிந்துகொண்டு, மேலே வருவதற்கு உதவினால், நிச்சயம் இவர்களும் சாதிப்பார்கள் என்பதை அம்மாவுக்கு புரிய வைத்தனர்.

ஜெர்மனியில் வசிக்கும் திருநங்கை தனுஜா அம்மம்மாவும் அம்மாவிடம் பேசி, எல்லாவற்றையும் புரிய வைத்தார். அதன் பிறகே என் அம்மா என்னைப் பார்த்த பார்வை முற்றிலுமாக மாறியது. என்னை மகளாகவே பாவித்து, பெண் உடைகளை தேர்வு செய்வது, ஹேர் எக்ஸ்டென்ஷன்ஸ் வாங்கித் தருவது, எனது கால்களில் கொலுசு மாட்டிவிடுவது, அலங்காரப் பொருட்களை வாங்கிவந்து தருவது, கூந்தலில் பூ வைத்து அழகு பார்ப்பது என ஆசை ஆசையாக என்னை அலங்கரித்துப் பார்த்து எனது பெண்மையை ரசிக்க ஆரம்பித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடித்துவிட்டு ஆண் உடையில் பள்ளியை விட்டு வெளியேறிய நான், எனக்குக் கிடைத்த ஒரு மாத விடுமுறையை பயன்படுத்தி, சைக்காட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட், எண்டக்னாலஜிஸ்ட், நியூராலஜிஸ்ட் மருத்துவர்களைச் சந்தித்து, மருத்துவ ரீதியாகவும், சான்றிதழ் ரீதியாகவும் ஆணுக்கான உடலில் இருந்த என் பெண்மையை மீட்டெடுத்தேன். பொருளாதார ரீதியாக அம்மாவிடம் இருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. நமது குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது’’ என்பதை வாழ்க்கை தந்த அனுபவத்தோடு அழுத்தமாகவே பதிவு செய்கிறார் அஜிதா.

‘‘+1 வகுப்பு தொடங்கிய முதல் நாள் நான் படித்த அதே பள்ளிக்குள் பெண் சீருடையில் நான் நுழைந்தேன். என் தலைமையாசிரியர் முதலில் ஆச்சரியம் காட்டினாலும், என்னை அவர் மகளாகவே பார்க்க ஆரம்பித்தார். ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்த சக மாணவர்களும் போகப்போக என்னை இயல்பாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். என்னோடு படிக்கும் சக மாணவிகளும், என் விரல் பிடித்தும்… என் தோள் சாய்ந்தும்… அவர்களோடு என்னை இணைத்துக்கொண்டு நடக்கிறார்கள். பள்ளி முழுக்கவே என்னை அஜிதாவாகவே பார்த்து…
அஜிதா என்றே அழைக்கிறார்கள்.

வீட்டில் உள்ளவர்களின் ஆதரவு நமக்கு முழுமையாகக் கிடைத்துவிட்டாலே, வெளி உலகமும் நம்மை சரியாகப் பார்க்கும். சரியாக நடத்தும்’’ என்கிற அஜிதாவுக்கு +2 முடித்ததும், பி.எஸ்.ஜி கல்லூரியில் எக்னாமிக்ஸ் படித்து ஐ.பி.எஸ் ஆகும் கனவு இருக்கிறது.கல்வி கட்டாயம் எல்லாவற்றையும் மாற்றும் என்பதில் உறுதி காட்டுகிறார் திருநங்கை அஜிதா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post எனது பெண்மையை அம்மா ரசிக்க ஆரம்பித்தார் appeared first on Dinakaran.

Tags : Amma ,Ajitha ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்