×

F4 கார் பந்தயம்: தனியார் அமைப்பு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: F4 கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதியில் ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடல் சுற்றி நடத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். வழித்தடத்தில் 2 மருத்துவமனைகள் இருக்கின்றன. முக்கிய அரசு அலுவலகங்கள், முப்படை அலுவலகங்கள் இருக்கின்றன. எனவே இந்த கார் பந்தயத்தை நகருக்குள் நடத்தக்கூடாது என 3 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

இந்த 3 வழக்குகளும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், மரங்கள் வெட்டப்படுவதாகவும், பொதுமக்களின் வரி பணம் வீணடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ராணுவம், துறைமுகம், கடற்படையின் பணிகளுக்கு கார் பந்தயம் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் கார் பந்தயத்தை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அச்சமயம் குறுக்கிட்ட நீதிபதிகள், மரங்கள் வெட்டப்படுவதற்கு ஆதாரங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ஃபார்முலா பந்தய தடம் அமைக்கும் பணிகளுக்காக ஒரு மரம் கூட வெட்டப்படவில்லை. அவ்வாறு வெட்டப்பட்டால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்தது. அதேசமயம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த பந்தயத்தை நடத்தாத போது, தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நடத்துகின்றன. தனியார் நடத்தும் கார் பந்தயத்திற்கு இவ்வளவு நிதி ஏன் ஒதுக்கப்படுகிறது? கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? அது தொடர்பான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அச்சமயம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஐ.பி.எல். போட்டி நடத்தப்படும் நடைமுறையில்தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு பதில் அளித்தது. இதை தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளன; ஏற்கனவே ஐதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தியுள்ளோம். பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பாண்கள், கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.200 கோடி முதலீடு செய்யப்பட்டது என்று போட்டி நடத்தும் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தனியார் அமைப்பு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் காப்பீடு தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்துள்ளனர்.

The post F4 கார் பந்தயம்: தனியார் அமைப்பு உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : F4 ,ICourt ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED பெண் வழக்கறிஞர் மீது பதிவு...