திருப்புத்தூர்,டிச.1: திருப்புத்தூர் நகர் பகுதிகளில் ரோடுகளின் நடுவே படுத்து கிடக்கும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. திருப்புத்தூர் நகரில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு தகுந்தாற்போல அகலமான ரோடு வசதிகள் இல்லை. இந்நிலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த அண்ணாசிலை, மதுரை ரோடு, சிவகங்கை ரோடு, காந்திசிலை, தாசில்தார் அலுவலகம், அஞ்சலக வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன.
அவை கூட்டம் கூட்டமாக ரோட்டை கடப்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி சிறு சிறு விபத்துக்களும் நடக்கிறது. குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் அதிகமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் மாடுகள் படுதுக் கிடக்கிறது. இதனால் மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளிட்ட பயணிகள் பஸ்சுக்காக காத்திருப்பவர்களை அச்சுறுத்துவதுடன், திடீரென மாடுகள் இங்கும் அங்குமாக ஓடிவருகின்றன. இதனால் பயணிகள் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் மாடுகள் ரோட்டின் நடுவே படுத்துக் கொள்வதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் இவ்வாறு ரோடுகளில் படுத்திருக்கும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். எனவே ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்புத்தூரில் பஸ் ஸ்டாண்டிற்குள் இடையூறாக கால்நடைகள் appeared first on Dinakaran.
