திருவாரூர், டிச. 1: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரையில் இடைவிடாது பெய்த சாரல் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்கி மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் 3 ம் தேதி புயலாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்த நிலையில் நேற்று காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் சாலை ஓர கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர். மேலும் பெரும்பாலான பள்ளிகளில் மாலையில் முன்கூட்டியே மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு, திருவாரூர் 23.,நன்னிலம் 38.8, குடவாசல் 46.2, வலங்கைமான் 29, மன்னார்குடி 32, நீடாமங்கலம் 44.4, பாண்டவயார் தலைப்பு 41.4, திருத்துறைப்பூண்டி 67.2 மற்றும் முத்துப்பேட்டை 52.2என மாவட்டம் முழுவதும் மொத்தம் 374.2 மி. மீ.மழையும் சராசரியாக 41.57 மி. மீ. மழையும் பெய்துள்ளது. அதன் பின்னர் மாலை 4 மணி வரையில் மொத்தம் 94.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
The post இடைவிடாது சாரல் மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.
