×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை,டிச.1: புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நாளை (2ம்தேதி) நடக்கிறது என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம், புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-2024ம் நிதியாண்டில் 39 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 28,513 நபர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது நாளை (2ம்தேதி) 28வது முகாம் புதுக்கோட்டை நகராட்சி போஸ்நகர் (31வது வார்டு) நலவாழ்வுசங்கம் மற்றும் பொன்னமராவதி வட்டாரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 29வது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் நோக்கம், கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகளுக்கு நேரில் சென்று மருத்துவ வல்லுநர் குழுவினர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களை பல்வேறு நோய்களிலிருந்து தொடக்க நிலையிலேயே கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து குணப்படுத்துவதாகும். பல்வேறு விதமான நோய்களுக்கு வருமுன் காப்போம் அணுகுமுறையை மக்களிடையே ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களுக்கு இலவச பன்முனை மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் வழங்கப்படுகிறது.

இம்முகாம்களில் மருத்துவ வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு மருத்துவ குழுவினரால் பொதுமக்களுக்கு குழந்தைகள் நலம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, இருதய நோய் சிகிச்சை, நீரிழிவு நோய் கண்டுபிடிப்பு, புற்றுநோய், காசநோய், மகப்பேறு மருத்துவம், சித்த மற்றும் இந்திய மருத்துவம், மனநல ஆலோசனை போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களால் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில், “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” நளை (2ம்தேதி) புதுக்கோட்டை நகராட்சி போஸ்நகர் (31வது வார்டு) நலவாழ்வுசங்கம் மற்றும் பொன்னமராவதி வட்டாரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இம்மருத்துவ முகாம் நடைபெறும். பொது மக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Varumun Kappom ,Pudukottai district ,Pudukottai ,Collector ,Mercy Ramya ,
× RELATED விராலிமலை அருகே ஏர்கன் வைத்து வேட்டையாடியவர் கைது..!!