சேலம்: சேலத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக கலந்து கொண்ட மாப்பிள்ளை, தாலி கட்டும் நாளில், அதிகாலை மண்டபத்திலிருந்து யாருக்கும் தெரியாமல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுபெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் விக்னேஷ் (எ) வெங்கடாசி (29). சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கும், சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
சேலத்தில் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக, செவ்வாய்கிழமை மாலை, திருமண வரவேற்பு சேலம் காந்தி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் மணமக்கள் இருவரும் மகிழ்ச்சியாக கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில், மண்டபத்தில் தங்கியிருந்த மாப்பிள்ளை வெங்கடாசி திடீரென மாயமானார். இதனையறிந்த பெண் வீட்டார் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மண்டபம் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது புதுமாப்பிள்ளை வேட்டி மற்றும் பனியனை போட்டு கொண்டு மண்டபத்தில் இருந்து அதிகாலை 5 மணியளவில் வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து திருமணம் நின்று போனது. இதுபற்றி மாப்பிள்ளையின் தந்தை வெங்கடேஷ், மகனை கண்டுபிடித்து தருமாறு, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ‘எஸ்கேப்’: திருமணம் நின்றதால் பெண் வீட்டார் சோகம் appeared first on Dinakaran.