×

குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்கினால் 1916 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்கினால் 1916 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம், என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 325 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் 29.11.2023 இரவு முதல் அனைத்து அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு கழிவுநீரகற்றும் பணிகள், மழைநீரை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகள் துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

15 மண்டலங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பதோடு கண்காணிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படுவதோடு ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு நிலையத்தின் செயல்பாடுகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார்கள் பழுதாகும் பட்சத்தில் மாற்று மின் மோட்டார்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் தேவையான அளவு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு களப்பணியாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தலைமை பொறியாளர்கள், அனைத்து மண்டல மேற்பார்வை பொறியாளர்கள், பகுதி பொறியாளர்கள் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களும் 29.11.2023 அன்று இரவு முதல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

மேலும், சாலைகளில் உள்ள மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் ஆகியவற்றை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கழிவுநீரை அகற்றுவதோடு மட்டுமல்லாமல், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றும் பணிகளையும் சென்னை குடிநீர் வாரிய அலுவலர்கள் / பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பகுதிகளில் நாளான்றுக்கு 1000 எம்.எல்.டிக்கு மேலாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டுவரும் நிலையில் வடகிழக்குப் பருவமழையின்போது நாளொன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தினை ஆய்வு செய்வதற்காக தினந்தோறும் குடிநீர் மாதிரிகள் சாதாரண நாட்களை விட அதிக அளவில் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

குடிநீர் விநியோக நிலையங்களில் குடிநீரில் தேவையான அளவு பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் சேர்த்து வழங்கப்படுகிறது. குடிநீர் விநியோக நிலையங்களில் பெரிய நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மற்றும் சிறிய நீர் உறிஞ்சும் மற்றும் ஜெனரேட்டர்களைக் கொண்டு தேங்கும் மழைநீர் இறைக்கப்படுகிறது. குடிநீர் விநியோக நிலையங்களிலும், கழிவு நீரிறைக்கும் நிலையங்களிலும் மணல் மூட்டைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை தொடர்பு கொள்வதற்கு பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916ல் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

* 784 புகார் மீது நடவடிக்கை
சமூக ஊடகங்களில் பெறப்படும் புகார்களும் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் இயந்திர நுழைவாயில்களில் ஏற்பட்டுள்ள சேதாரம் கழிவுநீர்ப் பாதைகளில் மழைநீர் கலந்தது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது போன்ற புகார்கள் 29.11.2023 இரவு முதல் தற்போது வரை 1170 புகார்கள் பெறப்பட்டுள்ளது. தற்போது வரை 784 புகார்கள் சரி செய்யப்பட்டு, மீதமுள்ள புகார்கள் தொடர்ந்து சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

* 2,149 பணியாளர்கள்
கழிவுநீர் பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 542 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

The post குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கழிவுநீர் தேங்கினால் 1916 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: குடிநீர் வாரியம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Board ,CHENNAI ,
× RELATED தேர்வு சீசன் தொடங்கியுள்ள நிலையில்...