×

மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 2 ஆயிரம் கன அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருவள்ளூர்: மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று புழல் ஏரிக்கு வரும் நீர்வரத்து, உபரி நீர் வெளியேற்றம் மற்றும் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட கலெக்டர் பேசும் போது, வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்ததாழ்வு மண்டலம் காரணமாக இந்த மழைப் பொழிவு திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களில் 100 மி.மீட்டருக்கு மேல் மழையளவு பதிவாகியுள்ளது. மாவட்டம் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளிலிருந்து மழை நீரை அகற்றுவதற்கான பணிகளில் உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

புழல் ஏரியின் நீர்வரத்து தற்சமயம் 600 கன அடி அளவிற்கு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த நீரினை வெளியேற்றும் பொருட்டு, நேற்று முன்தினம் 200 கன அடி மட்டும் வெளியேற்றப்பட்டது. நேற்று அதிகாலை 6 மணி அளவில் 1000 கன அடியாக அவை உயர்த்தப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை 9.30 மணியளவில் 2 ஆயிரம் கன அடியாக அவை உயர்த்தப்பட்டு நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் இந்த உபரி நீர், அருகில் உள்ள ஊருக்குள்ளோ அல்லது மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கோ செல்ல வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பொதுவாகவே, 3 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

சில தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு மூலமாக தெரியப்படுத்தி ஏதேனும் பிரச்னைகள் கண்டறியப்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கேசவபுரம், நாலூர் ஆகிய ஊராட்சிகளில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளையும் அந்த மழை நீரை விரைவாக வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது பொன்னேரி சப் கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ரூபேஷ்குமார், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், சோழவரம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோழவரம் ராமகிருஷ்ணன், பார்த்தசாரதி, மீஞ்சூர் சந்திரசேகர், குமார், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கௌரிசங்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுவாகவே, 3 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றுவதில் எந்த சிக்கலும் இருக்காது. சில தாழ்வான பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு ஏதேனும் பிரச்னைகள் கண்டறியப்பட்டால் அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

* 200க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்பு
புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு நேற்றைய நிலவரப்படி 2,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த உபரி நீர் வெளியேறும் கால்வாய் கரையோரம் அமைந்துள்ள செட்டிமேடு, ராஜிவ்காந்தி நகர் மற்றும் வடபெரும்பாக்கத்தில் சில இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவிலேயே வெள்ளம் சூழ்ந்தது. தகவலறிந்த மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன் மற்றும் தொண்டர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு பால், ரொட்டி, பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கினர்.

இந்த நிலையில் 19வது வார்டுக்கு உட்பட்ட பால சுப்பிரமணியம் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உபரிநீர் புகுந்தது. இதனால் குழந்தைகளும், முதியவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மண்டலக்குழு தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் காசிநாதன், உதவி ஆணையர் கோவிந்தராசு, அதிகாரிகள் பிரதீப்குமார், தேவேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பாலசுப்ரமணியம் நகருக்கு விரைந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட சுமார் 200 பேரை கும்பத்துடன் மீட்டு வாகனங்கள் மூலம் எம்.எம்.டி.ஏ 3வது பிரதான சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அழைத்து வந்து அங்கு அவர்களை பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

பின்னர் அவர்களுக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, பாய், போர்வை, ரொட்டி போன்றவற்றை வழங்கினார். மேலும் விஸ்வநாத தாஸ் நகர், அரியலூர், கன்னியம்மன் பேட்டை, ராஜிவ்காந்தி நகர், குளக்கரை தெரு, கடப்பாக்கம், ஆண்டார்குப்பம் போன்ற தாழ்வான பகுதிகளில் உபரி நீர் குடியிருப்புகளுக்கு மத்தியில் தேங்கியுள்ளது. இதையடுத்து மணலி மண்டல அதிகாரிகள் குழுவினர் ஆங்காங்கே பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டியும், மின் மோட்டார்கள் அமைத்தும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

The post மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை புழல் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 2 ஆயிரம் கன அடியாக உயர்வு: கரையோர மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Phujal lake ,Thiruvallur ,Puzhal Lake ,Dinakaran ,
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...