×

கடைசி நிமிடத்தில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு

ரபா: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் மேலும் ஒரு நாளைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். மேலும் 240 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதன் எதிரொலியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழியாகவும், தரைவழியாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இதுவரை சுமார் 13ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்ததுக்கு கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த 24ம் தேதி தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மொத்தம் 73 இஸ்ரேலியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 24 பணய கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று காலை 7 மணியுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. இஸ்ரேலும் ஹமாசும் தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.  இது குறித்து கத்தார் வெளியுறவு துறை அமைச் சகம் கூறுகையில், ‘‘நாள் ஒன்றுக்கு இஸ்ரேல் 30 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக. ஹமாஸ் 10 இஸ்ரேலிய பிணை கைதிகளை விடுவிக்கும். கடந்த முறை இருந்த அதே விதிமுறையின் கீழ் தற்காலிக போர் நிறுத்தம் ஏழாவது நாளாக நீட்டிக்கப்படடுகிறது” என்று தெரிவித்துள்ளது.

* ஜெருசலேமில் தாக்குதல்
ஜெருசலேமின் வெய்ஸ்மேன் தெருவில் துப்பாக்கி ஏந்திய பாலஸ்தீனியர்கள் இரண்டு பேர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதமேந்திய ஒருவர் தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்றனர்.

The post கடைசி நிமிடத்தில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Gaza Raba ,Israel ,Hamas ,Palestine ,Gaza ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்