×

ஓலைப்பெட்டிகள்… கோரைப்பாய் பைகள்… பிச்சுவாய் டிரங்க் பெட்டிகள்…

நன்றி குங்குமம் தோழி

பிறந்தநாள் முதல் 60-தாம் கல்யாணம் வரை, அலுவலகத்தின் அடிக்கல் நடுதல் முதல் திறப்பு விழா வரை அனைத்திற்கும் முதன்மையாக இருப்பது விருந்தோம்பல். நம் வீட்டு விழாவிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் விதமாக வழங்கப்படும் தாம்பூலம் நாளடைவில் அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவு, நிறம், என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும் என்பதனையும், எந்த மாதிரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதனையும் வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்கின்றனர்.

ஆனால் அதன் அடித்தளம் நமது பாரம்பரிய முறையில் செய்யப்படும் ஓலைப்பெட்டிகள், கோரைப்பாய் பைகள், துணிப்பைகள், பிச்சுவாய் டிரங்க் பெட்டிகள். இதனை கொண்டு தங்களின் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கிஃப்ட் ஹாம்பர்ஸ் தயாரித்து கொடுப்பது மட்டுமில்லாமல், நான்கைந்து குடும்பங்களைக் கொண்டு ஓலையிலான கூடைகளை செய்து விற்க ஆரம்பித்து தற்போது 200 குடும்பங்களுக்கு வேலை வழங்கி, தாம்பூலத்திற்காக பெங்களூரில் இருந்து தனக்கென தனித்துவமான ஒரு இடத்தை உருவாக்கி, இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் மதுரையை சார்ந்த மித்ரா லெவிஸ்.

‘‘நாங்க 2011-ல் சிறிய அளவில் பைபர் கிராஃப்ட்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்ய துவங்கினோம். ஆனால் எதிர்பாராத அளவிற்கு நம்ம ஊரின் கைவினை பொருட்கள் அந்த ஏற்றுமதியில் நிராகரிக்கப்பட்டது. அதனால் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தாம்பூலம், பரிசுப் பொருட்களை செய்து கொடுத்து வருகிறோம். ஆனால் தற்போது சமீப காலமாகத்தான் எந்த ஒரு விழவாக இருந்தாலும், அதற்கு பரிசுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்துள்ளது.

நமக்கு விருப்பப்பட்ட டிசைனில், விரும்பிய பொருட்களை விருந்தாளிகளுக்கு கொடுக்க ஆரம்பித்தனர். இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்த பிறகு மக்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சிட்டாங்க. அதனால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நாங்கள் புதுப்புது டிசைன் கொண்ட வண்ண வண்ண துணிப்பைகள், பெட்டிகள், கோரைப்பாய் பயன்படுத்தி செய்யப்பட்ட பைகள், ஓலைப் பெட்டிகள், பைகள் என பல வகைகளை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

இவை அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பதான் செய்து தருகிறோம். பொதுவாக தென் பகுதியை சேர்ந்தவர்கள் தான் தாம்பூலப் பை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரலட்சுமி நோன்பு, வளைபூட்டல் போன்ற நிகழ்வுகளுக்கு வரும் விருந்தாளிக்கு தாம்பூலப் பையில் வளையல், பிளவுஸ் பிட் துணியுடன் மஞ்சள் குங்குமம் கொடுப்பது வழக்கம். அதைதான் நாங்களும் செய்து வருகிறோம். ஆனால் எங்கள் பாணியில்’’ என்றவர் பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை தனது தொழில் மூலம் உயர்த்திஉள்ளார்.

‘‘நான் இந்த தொழிலை ஆரம்பித்த போது, மதுரையில் உள்ள ஆட்களை வைத்துதான் இந்த பொருட்களை தயாரிக்க ஆரம்பித்தேன். பிறகு இங்கு உள்ளூரில் இருக்கும் மக்களின் உதவியோடு செய்ய துவங்கினேன். கொரோனா நாட்களில் கிராஃப்ட் வேலை செய்து வந்தவர்களுக்கு வேலை இல்லாமல் போனது. அவர்களை நாங்க எங்களின் ஓலைகள் கொண்டு செய்யப்படும் பெட்டிகள், பைகள், ஓவியங்கள் வரையப்பட்ட டிரங்க் பெட்டிகள் போன்றவற்றை செய்ய பயன்படுத்திக் கொள்கிறோம். இதனால் அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் ஏற்படுத்தி தர முடிகிறது. அவர்களிடம் எங்களுக்கு என்ன மாதிரியான டிசைன்களில் பரிசுப் பொருட்கள் வேண்டும் என்று சொல்லிடுவோம். அவர்கள் வீட்டில் இருந்தபடியே அதனை செய்து தருவார்கள். கோரைப்பாய் கொண்டு நெய்யப்படும் பைகள், பெட்டிகளை நாங்க ெசய்கிறோம்.

ஓலைகள் வைத்து செய்யும் பொருட்கள் பெரும்பாலும் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். இதனை ஏற்றுமதி செய்யும் போதும் அதே நிறத்தில் இருந்ததால், அதில் வண்ணங்களை அறிமுகம் செய்தோம். ஆனால் சில சமயம் அதனை ஏற்றுமதி செய்யும் போது பெட்டிகள் பிரிந்து விடுவதால் அதன் அமைப்பு சரியாக இல்லை என்றெல்லாம் புகார்கள் வந்தன. அதை சரி செய்ய கூடைகளின் மேல் ரிப்பன், துணிகளை ஒட்ட ஆரம்பிச்சோம்.

இப்படி ஆரம்பிச்ச எங்களோட கிஃப்ட் ஹாம்பர் நாளடைவில் எங்களின் ட்ரேட் மார்க்காகவே மாறிடுச்சு. வீட்டில் விசேஷம் என்றால் எல்லாரும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான டிசைன்களில் உடைகளை அணிவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அதே போல்தான் நாங்கள் தயாரிக்கும் பெட்டி மற்றும் பைகளின் நிறத்திற்கேற்ப அதனுடன் வழங்கப்படும் பொருட்களும் அதே நிறத்தில் கொண்டு வந்தோம்’’ என்றவர் பண்டிகை காலங்கள் மற்றும் திருமண சீசன்களுக்காக தனித்தனியாக தீம்கள் அமைத்து அதற்கான கிஃப்ட் ஹாம்பர் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

‘‘நான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த போது ஏற்றுமதி மட்டும்தான் செய்து வந்தோம். அதனால் வேலை போக மற்ற நேரங்களில் என்ன செய்யலாம்னு யோசித்த போது வந்த ஐடியாதான் திருமணத்திற்கான கிஃப்ட் ஹாம்பர். முதலில் ஒரு மாடலை தயாரித்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டோம். அதில் நல்ல வரவேற்பு கிடைக்க, தாம்பூலம் (கிஃப்ட் ஹாம்பர்) செய்து தருவதையே முழுநேர பிசினஸாக மாற்றிக்கொண்டோம். இதனை மொத்த விற்பனை மட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்று கேட்பவர்களுக்கும் செய்து தருகிறோம்.

மொத்த விற்பனை என்று வரும் போது திருமணம் மற்றும் விசேஷ தினங்களுக்கு தான் கொடுப்பாங்க. மற்ற நேரங்களிலும் நம்மை நம்பி வேலை செய்பவர்களுக்கு ஒரு வருமானம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் சின்னச்சின்ன ஆர்டர்களையும் எடுக்க ஆரம்பிச்சோம். 200 பேர் குடும்பமாக வேலை செய்கின்றனர். அதில் பெண்கள் மட்டுமே 20க்கும் மேற்பட்டவர்கள் ஓலைப் பொருட்களை செய்யும் குழுவில் இருக்கிறார்கள்.

இது தவிர ஒவ்வொரு வேலைக்கும் தனிப்பட்ட குழு அமைத்திருக்கேன். சோஷியல் மீடியாவில் வரும் ஆர்டர்களை ஒரு குழு பார்த்துக் கொள்ளும். மொத்த விற்பனைக்கான ஆர்டர்களுக்கு தனி டீம் உள்ளது. எல்லாம் சரியாக டெலிவரி செய்யப்பட்டுள்ளதா என்று பார்க்க ஒரு குழு. இவ்வாறு தனித்தனி குழு அமைத்து வேலை செய்வதால் தான் எங்களால் சொன்ன நேரத்தில் ஆர்டர்களை முடித்து தர முடிகிறது.

நாங்க யாரும் லாபத்தை பெருசா வைத்து வேலை பார்ப்பதில்லை. என்னிடம் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்களின் பொருட்களின் மூலம் மகிழ்ச்சி, நிம்மதியை உணர வேண்டும் என்பதைக் கொண்டு தான் நாங்க வேலை செய்கிறோம். சில சமயம் பரிசுப் பொருட்களாக நாங்க கொடுப்பது வேஸ்ட் ஆகும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு அவங்களுக்காக கொடுத்த கிஃப்ட் பெட்டில் இருக்கும் வளையல் அளவு சரியாக இருக்காது. அதனால் அதனை திரும்பி அனுப்பிடுவார்கள். அதை எல்லாம் புரிந்து கொண்டு தான் நாம் இந்த தொழிலில் செயல்பட வேண்டும்’’ என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post ஓலைப்பெட்டிகள்… கோரைப்பாய் பைகள்… பிச்சுவாய் டிரங்க் பெட்டிகள்… appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Pichuai ,Dinakaran ,
× RELATED கிச்சன் டிப்ஸ்