×

சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 346 ஆட்டோ ஓட்டுநருக்கு சீருடைகள்: அமைச்சர் வழங்கினார்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழுகிணறு பகுதியில் 346 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை, தையல் இயந்திரம் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். சென்னை கிழக்கு மாவட்டம் இளைஞர் அணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை‌ முன்னிட்டு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் புதிய ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி ஏழுகிணறு பகுதியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 346 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கினார். 6 பேருக்கு புதிய ஆட்டோ வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகிய உங்களின் பங்களிப்பு தேர்தலின்போது அதிகம் உள்ளது. உங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதில் பெருமைப்படுகிறேன். தமிழக முதல்வர் வழியில் இளைஞர்களின் பிரதிபலிப்பாக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்’ என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டலக்குழு தலைவர் ராமுலு, கவுன்சிலர் பரிமளம், தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், வட்ட செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் திமுகவினர், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர்.

The post சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் 346 ஆட்டோ ஓட்டுநருக்கு சீருடைகள்: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai East District DMK Youth ,Chennai ,Yehukinaru ,Udayanidhi Stalin ,
× RELATED சாலையில் கிடந்த பணத்தை காவல்...